கோவை: பசுமை வழிச்சாலை - விவசாயிகள் கடும் எதிர்ப்பு
கொங்கு மண்டல விவசாய நிலங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பினர், கோவை-சக்தி பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.;
கோவை பத்திரக்கையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த கொங்கு மண்டல விவசாய நிலங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பினர், கோவை-சக்தி பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் விவசாயிகள் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுசூழல் கடுமையாக பாதிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். விவசாய நிலங்கள் எடுக்கப்பட்டால் 70% விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்றும், மாற்று வழிகளை அறிவியல் அடிப்படையில் ஆய்ந்து அமல்படுத்த வேண்டும் என்றும் கூறினர். மாவட்ட திட்டக் குழு, சாலை பாதுகாப்புக் குழுக்களில் விவசாயிகள் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது என்றும், விவசாய சங்க பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். நகரங்களுக்கு உள்ள போக்குவரத்து வசதிகளைப் போலவே கிராமங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்றும், மற்ற மாநிலங்களைப் போல விவசாயிகளின் கருத்துக்கள் கேட்டு திட்டமிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஐந்து வருடங்களுக்கு முன்பு அளவீடு செய்யப்பட்ட விவசாய நிலங்களில் இப்போது சாலை அமைக்கப்படுவது தேர்தல் வாக்குறுதியின் பெயரில் விவசாயிகள் மீது அழுத்தம் காட்டுவதாகவும் தெரிவித்தனர். இது பசுமை வழிச் சாலை அல்ல, பசுமை அழிப்பு சாலை எனக் கூறிய அவர்கள், திட்டம் நிறைவேற்றப்பட்டால் விவசாயிகள் உயிரிழக்க நேரிடும் என எச்சரிக்கை தெரிவித்தனர்.