சாலை விபத்தில் பலியான விவசாயி குடும்பத்துக்கு கூட்டுறவு நிறுவனம் சார்பில் இழப்பீடு வழங்கல்

இழப்பீடு;

Update: 2025-06-20 15:31 GMT
சாலை விபத்தில் பலியான விவசாயியின் குடும்பத்துக்கு, கூட்டுறவு நிறுவனமான இப்கோவில் உரம் வாங்கியவருக்கு இலவசக் காப்பீடு வழங்கப்பட்டதால் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.  இதனை வேளாண்மை இணை இயக்குனர் வழங்கினார்.  ஒன்றிய அரசின் கூட்டுறவு உர நிறுவனமான இப்கோ நிறுவனம், கடந்த 2022 ஆம் ஆண்டு விவசாயிகள் வழக்கமாக பயன்படுத்தும் 45 கிலோ யூரியா மூட்டை மற்றும் 50 கிலோ டி.ஏ.பி.-க்கு மாற்றாக அதே அளவு பயன் அளிக்கும் திறன் கொண்ட நானோ யூரியா மற்றும் நானோ டி.ஏ.பி. உரங்களை அறிமுகப்படுத்தியது. இந்த உரங்களை இலை வழியாக தெளிக்கும்போது மண்வளத்தை பாதிக்காமல் அதிக அளவு மகசூல் பெற உதவி செய்கிறது.  இந்த புதிய உரங்களை ஊக்குவிப்பதற்காக இப்கோ நிறுவனம் சங்கடஹரன் பீமா யோஜனா என்ற பெயரில் இலவச விபத்து காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நானோ உரங்கள் வாங்கும் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ஒரு பாட்டிலுக்கு ரூ.10,000 வீதம் இலவச விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு ஆண்டுக்கு 20 பாட்டில்கள் வரை ரூ.2 லட்சம்  விபத்து காப்பீடு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்திய பின்னர், தஞ்சை மாவட்டம், கும்பகோணம் இரண்டாம் கட்டளை பகுதியை சேர்ந்த விவசாயி கருணாகரன் 20 நானோ யூரியா பாட்டில்களை வாங்கி வயல்களில் பயன்படுத்தினார்.  இந்நிலையில், எதிர்பாராத விதமாக அவர் கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். தற்போது அவரது குடும்பத்திற்கு அதிகபட்ச காப்பீட்டுத்தொகையான ரூ.2 லட்சம் தொகையை இப்கோ நிறுவனத்தின் சார்பாக தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வித்யா மற்றும் இப்கோ கள அலுவலர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது. இப்கோ நானோ உரங்கள் குறைந்த விலையில் மண்வளத்தை பாதுகாப்பதுடன் விவசாயிகளின் இலவச விபத்து காப்பீடு நண்பனாகவும் விளங்குகிறது. நானோ உரங்கள் அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் தனியார் உரக்கடைகளிலும் கிடைக்கின்றன.

Similar News