அரக்கோணத்தில் பேருந்து கண்ணாடியை உடைத்து மாணவன் தப்பி ஓட்டம்

பேருந்து கண்ணாடியை உடைத்து மாணவன் தப்பி ஓட்டம்;

Update: 2025-06-25 05:12 GMT
அரக்கோணம் பஸ் நிலையத்திலிருந்து சோளிங்கருக்கு நேற்று மாலை அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சை டிரைவர் திருமலை (வயது 35) ஓட்டினார். கண்டக்டராக சிட்டிபாபு (50) இருந்தார்.அந்த பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கிய வாறு கூச்சலிட்டபடி வந்தனர். அவர்களை பஸ் உள்ளே வர சொல்லி டிரைவர், கண்டக்டர் கண்டித்தனர். ஆனால் அவர்கள் அதனை பொருட்படுத்தாது படிக்கட்டிலேயே தொங்கியவாறு பயணம் செய்தனர். இந்த நிலையில் சித்தேரி பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றபோது படிக்கட்டில் பயணம் செய்த சித்தேரி பகுதியை சேர்ந்த ஐ.டி.ஐ.படிக்கும் 16 வயது மாணவன் கீழே இறங்கி, அப்பகுதியில் கிடந்த கற்களை எடுத்து பஸ்சின் பக்கவாட்டு கண்ணாடியில் எறிந்தான். அதில் கண்ணாடி நொறுங்கியது. மேலும், பஸ் கண்டக்டரை தாக்கி விட்டு தப்பி ஓடினான். இதில் கண்டக்டர் சிட்டிபாபுவிற்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரக்கோணம் தாலுகா போலீசார் அரசு பஸ்சை சேதப்படுத்தி கண்டக்டரை தாக்கி தப்பி ஓடிய மாணவன் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News