மன்னார்குடியில் நான்கு சிறுவர்கள் மீட்பு
ரூ 4 லட்சத்துக்கு சிறார்களை வாங்கி கொத்தடிமையாக வாத்து மேய்க்க வைத்த கொடுமை - ஆந்திராவை சேர்ந்த தாய்- மகன் கைது;
மன்னார்குடி அருகே உள்ள இடையர் எம்பேத்தி கிராம பகுதியில் 4 சிறார்கள் வாத்துகளை மேய்த்துக் கொண்டிருந்தனர்.இந்த சிறார்கள் மிகவும் சோகத்துடன் அழுத நிலையில் இருந்ததை கண்ட அப்பகுதி மக்கள் சைல்ட் லைன் - தொலைபேசி எண்ணிற்கு புகார் தெரிவித்தனர்.இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாரூர் சைல்ட் லைன் அலுவலர்கள்,திருவாரூர் குழந்தைகள் நல பாதுகாப்பு துறை அதிகாரிகள்,மன்னார்குடி போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அடங்கிய குழுவினர் சிறார்களிடம் இது குறித்து விசாரணை செய்தனர். இதில் ஆந்திரமாநிலம் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த 12 மற்றும் 13 வயதுடைய 2 சிறுமிகள் மற்றும் 10 மற்றும் 15 வயதுடைய 2 சிறுவர்கள் இந்த வாத்து மேய்ப்பதில் ஈடுபடுத்தபட்டது தெரிய வந்தது. இவர்களை ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்ட பகுதியை சேர்ந்த பத்மா (வயது 38), அவரது மகன் லாரன்ஸ் (வயது 23) ஆகிய இருவரும் அந்த நான்கு சிறார்களையும் அவர்களது பெற்றவர்களிடத்தில் தலா ரூ 1 லட்சம் கொடுத்து கொத்தடிமையாக வாங்கி வந்து வாத்து மேய்ப்பதற்கு ஈடுபடுத்தியது தெரிய வந்தது.இதனை அடுத்து குழந்தைகளை மீட்டு வந்த குழுவினர் மன்னார்குடி உதவி கலெக்டர் யோகேஸ்வரனிடம் ஒப்படைத்தனர்.பின்னர் சிறார்கள் நால்வரும் திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டனர். மேலும் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மன்னார்குடி போலீஸாரிடம் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மன்னார்குடி போலீசார் குழந்தைகளை கொத்தடிமையாக வாத்து மேய்பதற்கு ஈடுபடுத்திய பத்மா மற்றும் லாரன்ஸ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.