அரியலூரில் ரத்ததான விழிப்புணர்வு பேரணி
அரியலூரில் ரத்ததான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தொடங்கி வைத்தார்.;
அரியலூர், ஜூலை.1- அரியலூர் அண்ணா சிலை அருகே உலக குருதி கொடையாளர் தினத்தையொட்டி தன்னார்வ ரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் ரத்ததான விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.பேரணியை ஆட்சியர் பொ.ரத்தினசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியானது செந்துறை சாலை, கல்லூரி சாலை வழியாக சென்று அரசு மருத்துவக்கல்லூரில் முகப்பில் நிறைவடைந்தது. பேரணியில் மருத்துவக்கல்லூரி மாணவ,மாணவிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியபடி சென்றனர். முன்னதாக, ரத்ததானம் செய்வதன் அவசியம் குறித்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உலக குருதி கொடையாளர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் ரத்த மையம் மற்றும் ரத்ததான முகாமில் உயிர்காக்கும் பொருட்டு தன்னார்வமாக ரத்த தானம் செய்த 26 நபர்கள், உலக குருதி கொடையாளர் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றிப்பெற்ற அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியை சேர்ந்த 6 மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு கேடயத்தை வழங்கினார்.அப்போது, அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் ரத்த மையத்தில் கடந்த ஆண்டு 4,645 யூனிட்ஸ் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. அதனைக்கொண்டு 8,500 மேற்பட்ட ரத்தம் மற்றும் ரத்த கூறுகள் மருத்துவமனை உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள், எலும்பு அறுவை சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை, குழந்தைகள் நலம், அவசர மற்றும் விபத்து பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, அவசர அறுவை சிகிச்சை பிரிவு உள்ளிட்ட நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.நிகழ்வில் மருத்துவக்கல்லூரி முதல்வர் அ.முத்துக்கிருஷ்ணன், மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ், கோட்டாட்சியர் கோவிந்தராஜ், நிலைய மருத்துவ அலுவலர் குளஞ்சிநாதன், துணை நிலைய மருத்துவ அலுவலர் ஜெயசுதா, வட்டாட்சியர் முத்துலெட்சுமி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.