போலி உரம், பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை ஆட்சியர் பொ.ரத்தினசாமி

போலி உரம், பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.;

Update: 2025-07-01 13:27 GMT
அரியலூர், ஜூலை 1- அரியலூர் மாவட்டத்தில்,போலி உரம் மற்றும் பூச்சிக் கொல்லிகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற வேளாண்மை இடுபொருள் விற்பனையாளர்களுக்கான ஆய்வுக் கூட்டத்துக்கு அவர் தலைமை வகித்து தெரிவித்தது: உர விற்பனையாளர்கள் உரக்கட்டுப்பாடு ஆணையின் உரம் இருப்பு மற்றும் விற்பனை விலை விபர தகவல் பலகை விவசாயிகள் அறியும் வண்ணம் வைத்திருக்க வேண்டும்.அதிகபட்ச(எம்.ஆர்.பி) விலைக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது. விற்பனை செய்யப்படும்  உரங்களுக்கு ரொக்க ரசீது விற்பனை முனை இயந்திரம்  மூலம் கொடுக்கப்பட வேண்டும். யூரியா உரத்துடன் மற்ற நுண்ணூட்டம் மற்றும் இதர பொருள்களை கட்டாயப்படுத்தி வழங்கக் கூடாது.மொத்த உர விற்பனையாளர்கள் வெளி மாவட்டங்களிலிருந்து உரம் பெற்று விற்பனை செய்யக்கூடாது. வெளி மாவட்டங்களிலிருந்து உரம் பெற விரும்பும் விற்பனையாளர்கள் முறையான அனுமதி பெற்று விற்பனை செய்யலாம். உர விற்பனையாளர்கள் யூரியா உரத்தை தனிநபர்களுக்கு கூடுதலாக வழங்கக்கூடாது. விவசாயிகளின் நிலப்பரப்பு மற்றும் சாகுபடி பயிருக்கேற்ப வழங்க வேண்டும்.மேலும், ஆதார் எண் பெற்று விற்பனை முனை கருவி மூலமாகவே வழங்க வேண்டும். மேலும் இவற்றை ஒரே சமயத்தில் வழங்காமல் பயிரின் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப யூரியா உரத்தை அடியுரம் மற்றும் மேலுரம் என பிரித்து அதற்கு ஏற்ப விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.தனி நபர்களுக்கு மொத்தமாக யூரியா உரத்தை வழங்கக் கூடாது. தரமான பூச்சிக்கொல்லிகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். தரமற்ற விதைகளை விற்பனை செய்யக் கூடாது. போலி உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்யக் கூடாது.  உரங்களை பயிரின் தேவைக்கேற்ப வழங்க வேண்டும்.  மேற்கண்ட நடமுறைகளை மீறுவோர்கள் மீது உரிமங்கள் ரத்து  செய்து, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் கீதா, வேளாண்மை உதவி இயக்குநர்(தரக்கட்டுப்பாடு)ராதாகிருஷ்ணன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News