மன்னார்குடியில் பிஆர்.பாண்டியன் பரபரப்பு பேட்டி
திமுக ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சியாக இருப்பதே தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க உதவும் பி.ஆர்.பாண்டியன்.;
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கர்நாடக,தமிழக விவசாயிகள் நலனுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமயா,துணை முதலமைச்சர் டிகே.சிவக்குமார் மேகதாட்டு அணைக்கு ஆதரவாக பேசி வரும் நிலையில்,தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் வாய் திறக்க மறுப்பதின் மூலம் மேகதாட்டு அணை கட்டுவதை நியாயப்படுத்த முயற்சிக்கிறாரா? தமிழகத்தின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க வேண்டிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்,வாய் திறக்க மறுப்பது பெற்ற தமிழக காவிரி உரிமையை கர்நாடகாவிடம் மீண்டும் பறிகொடுக்கும் நிலையாக உள்ளது. எனவே தமிழக முதலமைச்சர் உடனடியாக எதிர்ப்பு தெரிவிக்க முன்வர வேண்டும். மேகதாட்டு அணை கட்டுவதற்கான நிர்வாக அலுவலகம் திறப்பதும், கட்டுமானத்திற்கான பூர்வாங்க நடவடிக்கையை துவங்குவதும் நீதிமன்ற அவமதிப்பு என்ற அடிப்படையில் கர்நாடக அரசின் மீது உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அவசரமாக தொடர தமிழக அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசியல் சுய லாபத்துக்காக சட்டத்திற்கு விரோதமாக இரு மாநில ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் கர்நாடக அரசு செயல்படுவதை தமிழக அரசு அனுமதிக்க கூடாது. என வலியுறுத்துகிறேன் என்றார். மேலும் முல்லைப் பெரியாறு அணையில் பேரிடர் ஏற்படும் நிலையில் ரூல்கர்வ் முறையில் 136 அடி கொள்ளளவுக்கு மேல் உயராமல் நீர் சேமிப்பை பராமரித்துக்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.ஆனால் தற்போது தென்மேற்கு பருவ மழை சராசரி மழை அளவு பெய்து வரும் நிலையில் அணையில் 142 கொள்ளளவை உயர்த்தாமல் தண்ணீரை திறக்க தமிழக அரசு அனுமதிப்பது மூலம் முல்லைப் பெரியாறு தமிழக உரிமையையும் விட்டுக் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எனவே திமுக எதிர் கட்சியாக இருக்கும் போது தமிழக நலனுக்காக குரல் கொடுப்பதும், ஆளுங்கட்ச்சியாக மாறிவிட்டால் தமிழக நலன்களை விட்டுக் கொடுப்பதும் ஏற்க இயலாது. எனவே திமுக எதிர்கட்சியாக இருப்பது தான் தமிழக நலனுக்கு உதவியாக இருக்கும் என்றார்.