பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

விளாத்திகுளம் அருகே மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!;

Update: 2025-07-03 02:47 GMT
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி மேலக்கரந்தை தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், எட்டையபுரம், புதூர் பகுதிகளில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தற்போது வரை வெள்ள நிவாரணம் வழங்கப்படவில்லை என்பதால் மேலக்கரந்தை தேசிய நெடுஞ்சாலையில் 100-க்கும் அதிகமான விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், கடந்த 2023 - 2024-ம் ஆண்டு பயிர் காப்பீடு தற்போது வரை விடுவிக்கப்படவில்லை என்பதால் அதனையும் உடனடியாக வழங்க வேண்டும், வெம்பூரில் சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியை வருவாய்த்துறை முழுமையாக கைவிட வேண்டும், விளைபொருளுக்கான மக்காச்சோளம், வெள்ளைச் சோளம், கம்பு, உளுந்து, பாசி, கொத்தமல்லி, வத்தல் போன்ற பயிர்களுக்கு அரசு நிரந்தர விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்து முழக்கமிட்டனர். மேலும், உடனடியாக பயிர்கள் காப்பீட்டு தொகை மற்றும் மழை நிவாரணத்தொகை வழங்கப்படவில்லையென்றால், வருகின்ற ஜூலை 9-ம் தேதி புதூரில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News