பயிர் காப்பீடு பதிவு செய்து பயன்பெறலாம்
பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ், காரீப் பருவத்தில் விவசாயிகள் நெல்-I, மக்காச்சோளம்-I, சோளம், நிலக்கடலை மற்றும் பருத்தி-I பயிரில் பயிர் காப்பீடு பதிவு செய்து பயன்பெறலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தகவல்;
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் எற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கவும் செயல்படுத்தப்படுகிறது. 2025-ம் ஆண்டில் காரீப் பருவமாக திண்டுக்கல் மாவட்டத்தில் பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ், காரீப் பருவத்தில் விவசாயிகள் நெல்-I, மக்காச்சோளம்-I, சோளம், நிலக்கடலை மற்றும் பருத்தி-I பயிரில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு பதிவு செய்துகொள்ளலாம். இத்திட்டத்தை எஸ்பிஐ காப்பீட்டு நிறுவனம் மாவட்டத்தில் செயல்படுத்துகிறது. இத்திட்டத்திற்கு நடப்பு ஆண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் காரீப் பருவத்தில் மொத்தமாக 111 குறு வட்டங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடன்பெறும் விவசாயிகள், அவர்கள் கடன்பெறும் வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் விருப்பத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறா விவசாயிகள், பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்யலாம். மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.