வளர்ச்சித் திட்ட பணிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
இலட்சுமிபுரம் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்;
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியம், மல்லனம்பட்டி ஊராட்சி, இலட்சுமிபுரத்தில் வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டத்தில் ரூ.2.26 இலட்சம் மதிப்புள்ள பவர்டிரில்லர் இயந்திரம் ரூ.1.13 இலட்சம் மதிப்பீட்டிலான மானியத்தில் விவசாயி திருமதி சுஜாதா இந்திரவதனிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து, சேவுகம்பட்டி பேரூராட்சி எம்.வாடிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகள் வருகை, எண்ணிக்கை, சிகிச்சை முறைகள், மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தார். வத்தலகுண்டு பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள தினசரி காய்கறி சந்தையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.2.89 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வணிக வளாகம் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, வத்தலகுண்டு பேரூராட்சி பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.1.49 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள எல்பிஜி எரிவாயு தகன மையத்தை பார்வையிட்டார். கணவாய்ப்பட்டியில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.35.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உலர் களத்துடன் கூடிய தரம் பிரிக்கும் கூடத்தை பார்வையிட்டார். பின்னர், எழுவனம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.34.23 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை கட்டடம், ரூ.16.82 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி வகுப்பறை கட்டடம் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு, உணவின் தரத்தை ஆய்வு செய்தார். எழுவனம்பட்டியில் ரூ.17.25 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அங்கன்வாடி மையம் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பி.விராலிப்பட்டி ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகள் வருகை, எண்ணிக்கை, சிகிச்சை முறைகள், மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தார். ரூ.5.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குப்புச்சாமி, மணிமாறன் பாண்டியன் மற்றும் பலர் உடனிருந்தனர்.