ராமநாதபுரம் சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு
திருட்டு வழக்கில் கேரளாவை சேர்ந்த பிஜூ கைதி சிறைச்சாலையில் உயிர் இழப்பு;
ராமநாதபுரம் மாவட்டம் சிறையில் திருட்டு வழக்கில் அடைக்கப்பட்டிருந்த கேரளாவைச் சேர்ந்த விசாரணை கைதி உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் கேரளா மாநிலம் திருச்சூர் கள்ளரி தாரா ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த பிரான்ஸிஸ் மகன் பிஜூ(53). இவரை சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் போலீஸார் திருட்டு வழக்கில் கைது செய்து, 29.11.2024 அன்று ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர். இங்கு விசாரணைக் கைதியாக இருந்த பிஜூ, நேற்று காலை சிறை வளாகத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறைக்காவலர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அதன்பின் அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக பிரேத பரிசோதனை கூடத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது. உடற்கூறு ஆய்வுக்கு பின்னரே பிஜூ உயிரிழப்பு குறித்து தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பஜார் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளா மாநிலம் அலத்தூர் காவல்நிலையத்தில் பிறரை குற்றம் செய்யத் தூண்டியதாக பிஜூ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.