ராமநாதபுரம் வங்கியில் பணம் எடுக்க முடியாமல் மாற்றுத்திறனாளி கவலை
தோல் நோய் பாதிப்பால் கைரேகை வைக்க முடியாததால் வங்கியில் பணம் எடுக்க முடியாமல் வறுமையில் வாடுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு மாற்றுத்திறனாளி கோரிக்கை மனு அளித்தார்.;
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகேயுள்ள வளநாடு கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் (40). இவருக்கு சிறுவயதிலிருந்தே இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில், தோல் நோயால் பாதிக்கப்பட்டு, கண்பார்வைக் குறைறபாட்டுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் கிடைத்த பணத்தில் தனக்கான தேவைகளைப் பூர்த்தி செய்து வந்துள்ளார். தற்போது வங்கியில் சுரேஷ்குமாரின் சேமிப்புக் கணக்கில் ஆதார் எண் இணைப்பதற்கு அவரின் கை ரேகை வைக்க முடியாததால், ஊராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் ஊதியப் பணத்தை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஊதியப் பணம் கிடைக்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமென சுரேஷ்குமார், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலதண்டாயுத்தை சந்தித்து மனு அளித்தார். இதுகுறித்து சுரேஷ்குமார் கூறியதாவது தனது கை விரல்கள் தோல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாலும், கண்களில் பாதிப்பு காரணமாக கருவிழியையும் படம் பிடிக்க முடியாததால் ஆதார் அட்டை எடுக்க முடியவில்லை. ஆதார் எண் இல்லாமல் வங்கி சேமிப்புக் கணக்கில் ஊதியப் பணத்தை எடுக்க முடியாத நிலை உள்ளது. கடந்த ஏப்ரல் முதல் வேலை இல்லாததால் எனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் ஊதியம் கிடைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.