பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுபட்ட கூலிப்படையினர் - உயிர் பயத்தில் பதறி ஓடிய கிராம மக்கள்
கூலி படை;
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டியில் தேனி - பெரியகுளம் சாலையில் பஞ்சர் கடை நடத்தி வருபவர் பெருமாள் மகன் தம்பி என்ற பெருமாள் (45). இரவு கடை முன்பாக இவரும் இவரது நண்பர்கள் சிலரும் கடையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.. அப்போது சுமார் பத்து பேர் கொண்ட கூலிப்படையைச் சேர்ந்த கும்பல் பட்டாகத்தி கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கரமான ஆயுதங்களுடன் ஓடி வந்ததை பார்த்து கடையில், பெருமாளுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த கிராம மக்கள் பதற்றம் அடைந்து அங்கிருந்து ஓடினர். அப்போது கடையில் இருந்த பெருமாளை ஆயுதங்களுடன் வந்த கூலிப்படை கும்பல் அரிவாளால் வெட்டினர் . மேலும் இவரது உறவினர் முத்து மகன் செல்வம் என்பவருக்கும் முதுகில் வெட்டு விழுந்தது. இதனையடுத்து வெட்டி தாக்கிய கும்பல் ஒரு காரில் ஏறி அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கைலாசபட்டி கிராமத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பெரியகுளம் - தேனி நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நல்லு தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட முயன்றவர்களை சமாதானப் படுத்தி சாலை மறியலில் ஈடுபட வேண்டாம் எனக் கூறி சாலை மறியதை கைவிட செய்தனர் . அப்போது பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கைலாசபட்டி கிராமத்தைச் சேர்ந்த சிலர் மீது சந்தேகம் இருப்பதாகவும், இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதில் படுகாயம் அடைந்த பெருமாள், செல்வம் ஆகிய இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பட்டாகத்தி மற்றும் அருவாளுடன் பயங்கர ஆயுதங்களுடன் கிராம பகுதிக்குள் புகுந்து வெட்டி தாக்கிய சம்பவத்தால் கிராம மக்கள் பெரும் அதிர்ச்சி மற்றும் அச்சத்தில் உள்ளனர்.