அஜித்குமார் குடும்பத்தாரிடம் பேரம் பேசும் வீடியோ வெளியீடு
இளைஞர் கொலை வழக்கு தொடர்பாக அவரது குடும்பத்தாரிடம் பேரம் பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது;
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் (29) போலீஸார் தாக்கியதில் கொல்லப்பட்டார். இதனிடையே போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள், அஜித்குமார் குடும்பத்தினரை மிரட்டி பேரம் பேசியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து ஏற்கெனவே அஜித்குமார் குடும்ப வழக்கறிஞர் கணேஷ்குமார், மடப்புரத்தில் தனியார் மண்டபங்களில் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் தனித்தனியாக திமுகவினர் மூலம் அஜித்குமார் குடும்பத்தினரை துன்புறுத்தி பேரம் பேசினர். அதனை சிலர் வீடியோவும் எடுத்துள்ளனர். அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம் என்று கூறி இருந்தார். இந்நிலையில் அஜித்குமார் குடும்பத்தினரிடம் போலீஸார், அரசியல்வாதிகள் பேச்சு வார்த்தை நடத்தியது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் போலீஸார், திமுக முக்கிய நிர்வாகி உள்ளிட்ட சிலர், மடப்புரத்தில் உள்ள தனியார்மண்டபத்தில் அஜித்குமார் குடும்பத்தினருடன் அமர்ந்து பேசுகின்றனர். இதையறிந்த அஜித்குமாரின் நண்பர்கள், பூட்டியிருந்த மண்டபத்தை திறக்க வலியுறுத்தி சத்தமிட்டு, கதவுகளை தாக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.