கனரா வங்கி மேலாளர் உட்பட ஐந்து வங்கி ஊழியர்கள் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
வழக்கு பதிவு;
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள இ. புதுக்கோட்டை காந்தி நகரை சேர்ந்த பிரபா என்ற பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் அப்பகுதியில் உள்ள பெண்களை ஒன்றிணைத்து மகளிர் சுய உதவிக் குழு அமைத்து பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள கனரா வங்கி கிளையில் கடன் கேட்டு கடந்த 25.09.2024 அன்று விண்ணப்பித்துள்ளனர். அப்பொழுது வங்கி மேலாளர் கவிதா வங்கி ஊழியர் கண்ணன் என்பவரை அணுகும்படி கூறியுள்ளார். கடன் வழங்குவதற்கு 12,000 ரூபாய் வழங்க வேண்டும் என வங்கி ஊழியர் கண்ணன் தெரிவித்ததை தொடர்ந்து மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த பிரபா என்ற பெண் வங்கி மேலாளரிடம் முறையிட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது கனரா வங்கி மேலாளர் கவிதா மற்றும் வங்கி ஊழியர்கள் பட்டியலின ஜாதி பெயரை கூறி இழிவாக பேசியதாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் எஸ்சி, எஸ்டி ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இப்பிரச்சினை குறித்து எஸ்சி எஸ்டி ஆணைய உத்தரவின் பேரில் பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் கனரா வங்கி மேலாளர் கவிதா, வங்கி ஊழியர்கள் சுதா, சந்திப், சுனில், கண்ணன் ஆகிய ஐந்து நபர்கள் மீதும் எஸ்சி. எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்ட கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.