மருமகனை தாக்கி கொலை மிரட்டல்: மாமனார் கைது
கோவில்பட்டியில் குடும்பத் தகராறில் மருமகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மாமனாரை போலீசார் கைது செய்தனர். ;
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சோ்ந்த ப. முருகேசனுக்கும் (29), திருமங்கலம் சிவரக்கோட்டை பாண்டியன் நகரைச் சோ்ந்த ச. சுதா்சன் மகள் சுகன்யாவுக்கும் கடந்த இரு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாம். திருமணத்திற்குப் பின் சுகன்யாவுக்கும், முருகேசனின் தாய்க்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம். இதையடுத்து, முருகேசன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கோவில்பட்டி வள்ளுவா் நகா் 1ஆவது தெருவில் குடியிருந்து வந்தாா். இந்நிலையில் சுகன்யா தனது குழந்தையுடன் திருமங்கலத்திற்கு சென்று குழந்தையின் பெயரை பதிவு செய்தாராம். இதையறிந்த முருகேசன், சுகன்யாவிடம் கேட்டபோது தகராறு ஏற்பட்டதில், முருகேசன் அவரை தாக்கினாராம். இதையடுத்து முருகேசன் நேற்று தனது வீட்டருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த சுதா்சன், முருகேசனை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தபடி அங்கு கிடந்த கல்லால் சரமாரியாகத் தாக்கினாராம். அப்போது சுகன்யா, அவரது தாய் சின்னத்தாய் ஆகியோா் முருகேசனை ஓட விடாமல் பிடித்துக் கொண்டாா்களாம். தாக்குதலில் காயமடைந்த முருகேசன், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் சுதா்சனை போலீசார் கைது செய்தனர். அவரது மனைவி மற்றும் மகளை தேடி வருகின்றனர்.