மு.க.முத்து உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி
உடல்நலக் குறைவால் காலமான மு.க.முத்து உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தொல். திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.;
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து (77). இவரது உடல்நிலை சில ஆண்டுகளாக மோசமாகி வந்த நிலையில், இன்று (ஜூலை 19) காலமானார். கருணாநிதி - பத்மாவதி தம்பதிக்கு 1948 ஆம் ஆண்டு மகனாக பிறந்தவர் மு.க.முத்து. கடந்த 1970 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான மு.க.முத்து, ''பிள்ளையோ பிள்ளை'', ''சமையல்காரன்'', ''அணையாவிளக்கு'', ''இங்கேயும் மனிதர்கள்'', ''பூக்காரி’' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மு.க.முத்து, தான் நடித்த படங்களில் சில பாடல்களையும் பாடியிருக்கிறார். திமுக மேடைகளிலும், கட்சியின் கொள்கை விளக்க பாடல்களையும் பாடியுள்ளார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மு.க.முத்து இன்று (ஜூலை 19) சிகிச்சை பலனின்றி காலமானார். மறைந்த மு.க.முத்துவின் உடல் சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் அனைவரும் கோபாலபுரத்தில் உள்ள மு.க.முத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் மு.க.முத்துவின் சகோதரரான மு.க.அழகிரி, சகோதரி கனிமொழி எம்பி, நடிகர் அருள்நிதி, நடிகர் சத்யராஜ், பாடலாசிரியர் வைரமுத்து, விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏ.சி. சண்முகம், திராவிடர் கழக துணைத் தலைவர் பூங்குன்றன் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். மேலும் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, மறைந்த மு.க.முத்துவின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. பின்னர் சென்னை பெசன்ட் நகர், மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.