நாமக்கல் கிட்னி விற்பனை: தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் தலைமையில் விசாரணை

நாமக்கல் கிட்னி விற்பனை தொடர்பாக தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் எஸ்.வினீத் தலைமையில் விசாரணை நடத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2025-07-19 16:13 GMT
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்களிடம் வறுமையை காரணம் காட்டி சிலர் புரோக்கர்களாக செயல்பட்டு கிட்னியை விற்பனை செய்ய வைப்பதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிட்னியை கொடுப்பவர்களுக்கு 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கித் தருவதாக கூறி தனியார் மருத்துவமனைகளுக்கு ரகசியமாக அழைத்துச் சென்று கிட்னி விற்பனை செய்ய வைப்பது தெரிய வந்துள்ளது. நாமக்கல் மாவட்ட மருத்துவ திட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, கிட்னி விற்பனையில் மூளையாக செயல்பட்ட இடைத் தரகர் ஆனந்தன் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், தமிழ்நாடு முழுவதும் ஆய்வு நடத்துமாறு மாவட்ட இணை இயக்குநர்களை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சுகாதார திட்ட இயக்குநர் தலைமையில் விசாரணைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் சிறுநீரகம் விற்றதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் வந்த செய்திகள் அடிப்படையில் விசாரித்ததில் 52 வயது மதிக்கத்தக்க இடைத்தரகர் இதில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அவர் மீது பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். பள்ளிபாளையம், அன்னை சத்யா நகரில் உள்ள விசைத்தறி கூடத்தில் ஏழை, எளிய தொழிலாளர்களிடம் சிறுநீரகத்திற்கு பணம் பெற்று தருவதாக ஆசை காட்டி இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் எஸ்.வினீத் தீர விசாரித்து, அறிக்கையை அரசுக்கு இரண்டு வாரங்களுக்குள் அளிக்குமாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News