அரசு மருத்துவமனையில் தூய்மை பணிக்காக அதிநவீன எந்திரங்கள்
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தூய்மை பணிக்காக அதிநவீன எந்திரங்கள் வாங்கப்பட்டு உள்ளன.;
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் உள்நோயாளியாகவும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இதனால் மருத்துவமனை வளாகம் மற்றும் வார்டுகளை தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தனியார் நிறுவனம் மூலம் தூய்மை பணிகள் நடக்கிறது. அரசு மருத்துவமனையில் 522 தூய்மை பணியாளர்க்ள, 110 பாதுகாவலர்கள், 21 மேற்பார்வையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நவீன முறையில் மருத்துவமனையை சுகாதாரமாக தூய்மைப்படுத்தும் வகையில் புதிய எந்திரங்கள் வாங்கப்பட்டு உள்ளன. இதில் வேக்கும் கிளீனர், தரையை தேய்த்து சுத்தம் செய்யக்கூடிய ஸ்கிரப்பிங் எந்திரம், தோளில் மாட்டிக் கொண்டு தூசியை அகற்றும் எந்திரம், அதிக அழுத்தத்தில் தண்ணீரை செலுத்தி சுத்தம் செய்யும் எந்திரம், நடைபாதையில் உள்ள மண்ணை அகற்றும் எந்திரங்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. இந்த எந்திரங்களை உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி மற்றும் அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த எந்திரங்கள் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இது தூய்மை பணியாளர்களின் வேலையை எளிதாக்குவது மட்டுமின்றி மருத்துவமனை வளாகத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.