சாலையை சேதப்படுத்தும் லாரியை தடுத்து நிறுத்தி முற்றுகை
உத்திரமேரூரில் சாலையை சேதப்படுத்தும் லாரியை தடுத்து நிறுத்தி டாக்டர் எம்.ஜி.ஆர்., நகர மக்கள் முற்றுகையிட்டனர்.;
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி, டாக்டர் எம்.ஜி.ஆர்., நகரில், 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள, பிரதான சாலையை பயன்படுத்தி, அப்பகுதியில் வசிப்போர் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் செல்கின்றனர். இந்நிலையில், இங்குள்ள ஏரி நீர்வரத்து கால்வாய் அருகே, தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் வீட்டுமனை பிரிவுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, வீட்டுமனை பிரிவுகள் அமைக்கும் இடத்தினை சமன்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. அதற்காக, அங்குள்ள பிரதான சாலையின் மீது லாரிகளில் மண் கொண்டு வரப்படுகிறது. அதிக பாரத்துடன் லாரிகள் தொடர்ந்து செல்லும்போது, சாலை சேதமடைந்து வருகிறது. எனவே, அப்பகுதியில் வசிப்போர் அதிக பாரத்துடன் மண் ஏற்றிவரும் லாரிகளை, பிரதான சாலை வழியாக வரக்கூடாது என்றுகூறி, லாரியை தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டு, ரியல் எஸ்டேட் நிறுவன ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் சார்பில் புதிதாக சாலை அமைக்கப்படும் என்று கூறியதையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து சென்றனர்.