சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட அனைத்து துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் 15.08.2025 அன்று சுதந்திர தின விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. நம் தாய்த்திரு நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்கள், தியாகிகளை நினைவு கூர்ந்து அவர்களின் அளப்பரியா அர்ப்பணிப்பு மிக்க தேசப்பற்றை போற்றும் விதமாக அன்றைய நிகழ்ச்சிகள் அமைய வேண்டும்.;
சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட அனைத்து துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது. சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட அனைத்து துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா முன்னிலையில் இன்று (30.07.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் 15.08.2025 அன்று சுதந்திர தின விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. நம் தாய்த்திரு நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்கள், தியாகிகளை நினைவு கூர்ந்து அவர்களின் அளப்பரியா அர்ப்பணிப்பு மிக்க தேசப்பற்றை போற்றும் விதமாக அன்றைய நிகழ்ச்சிகள் அமைய வேண்டும். அரசுத்துறை அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் பட்டியலை உரிய காலத்திற்குள் தயாரித்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) அவர்களிடம் வழங்க வேண்டும். மேலும் விழா நடைபெறும் மேடை, தியாகிகள் அமரும் இடம், செய்தியாளர்களுக்கான அமருமிடம், பயனாளிகள் அமரும் இடம் ஆகியவற்றினை முறையாக கண்காணித்து தேவையான இடங்களில் நிழல் பந்தல் அமைத்து இருக்கைகள் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் பணியினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும், முக்கிய பிரமுகர்களை விழாவிற்கு அழைக்கும் பணியினை வட்டாட்சியர்களும், சுதந்திர தின விழாவை முன்னிட்டு புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் இருந்து மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு தேவையான பேருந்துகளை இயக்கும் பணியினை போக்குவரத்துத்துறையினரும் மேற்கொள்ள வேண்டும். விழா நடைபெறும் மைதானத்தில் பார்வையாளர்கள் அமரும் இடங்களில் பந்தல்கள், விழாமேடை, கொடிமரம் அமைந்துள்ள பகுதிகளை பொதுப்பணித்துறையினர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். போதிய குடிநீர் வசதி, கழிவறை வசதிகளை நகராட்சி நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்ய வேண்டும். மருத்துவக்குழுவினர், தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு காரணம் கருதி தயார் நிலையில் இருக்க வேண்டும். காவல்துறையினர் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் விழா சிறப்பாகவும், அமைதியாகவும் நடந்திட அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும் சுதந்திர தின விழாவில் பொதுமக்கள் அதிகமாக பங்கேற்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பு பணிகள் மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் பணிகள் உள்ளிட்டவைகளை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் உள்ள காவலர்கள் மேற்கொண்டு சுதந்திர தின விழாவை சிறப்புடன் நடத்திட வேண்டும் இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கோபாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) வைத்தியநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.