உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் பார்வையிட்டார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் இதுவரை 20 முகாம்கள் நடைபெற்றுள்ளது. இம்முகாம்களில் பொதுமக்கள் பல்வேறு தேவைகள், கோரிக்கைகள் வேண்டி 16,942 மனுக்கள் அளித்துள்ளனர். குறிப்பாக இதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வேண்டி 6,264 மனுக்கள் அளித்துள்ளனர்.;

Update: 2025-07-30 17:20 GMT
குரும்பலூரில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் பார்வையிட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 15.07.2025 அன்று முதல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, மாவட்ட ஆட்சித்தலைவர் வழிகாட்டுதலின்படி, சிறப்புடன் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று (30.07.2025) ஊரகப் பகுதிகளுக்கான முகாம் இரூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், நகர்ப்புற பகுதிகளுக்கான முகாம் குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பங்காரு அம்மாள் நினைவு அரங்கத்திலும் நடைபெற்றது. இதில் குரும்பலூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் பார்வையிட்டு, பொதுமக்களிடம் தேவைகள் மற்றும் கோரிக்கை தொடர்பாக கேட்டறிந்தார். பின்னர், மனுக்கள் வழங்குவது தொடர்பான வழிகாட்டுதல்களை அலுவலர்கள் பொதுமக்களுக்கு வழங்கிடவும், அனைத்து மனுக்களுக்கும் விரைந்து தீர்வு ஏற்படுத்திட வேண்டும் என பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரசு துறைகளின் சேவைகள் தொடர்பாக முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஊரக பகுதிகளில் 15 அரசுத்துறைகள் பங்கேற்று 46 சேவைகளையும், நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகள் பங்கேற்று 43 சேவைகளையும் நேரடியாக வழங்கி வருகிறது, மேலும் இம்முகாமில் பொதுமக்கள் அளிக்கப்படும் அனைத்து மனுக்களும் இணைய வழியாக பதிவேற்றம் செய்து தொடர்புடைய துறைகளுக்கு அனுப்பப்பட்டு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு , பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் இதுவரை 20 முகாம்கள் நடைபெற்றுள்ளது. இம்முகாம்களில் பொதுமக்கள் பல்வேறு தேவைகள், கோரிக்கைகள் வேண்டி 16,942 மனுக்கள் அளித்துள்ளனர். குறிப்பாக இதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வேண்டி 6,264 மனுக்கள் அளித்துள்ளனர். இம்மனுக்கள் அனைத்தும் இணைய வழியாக பதிவேற்றம் செய்து தொடர்புடைய துறைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில், குரும்பலூர் பேரூராட்சித் தலைவர் சங்கீதா ரமேஷ், பெரம்பலூர் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் திரு.சுதாகர், குரும்பலூர் பேரூராட்சி செயல் அலுவலர் தியாகராஜன், பேரூராட்சி துணைத்தலைவர் திரு.துரைராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News