கோவை கடை வீதி காவல் நிலையத்தில் தூக்குத் தற்கொலை: சிசிடிவி காட்சிகள் வெளியீடு
காவல் நிலையத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவரின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு.;
கோவை மாநகர காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நேற்று தூக்குப் போட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல் உதவி ஆய்வாளர் அலுவலகத்தின் கதவை திறக்க காவலர் முயன்றபோது அது உள்ளிருந்து தாழ்ப்பாளிடப்பட்டிருந்தது. கதவை உடைத்துப் பார்த்ததில், ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருந்தது தெரியவந்தது. உயிரிழந்தவர் பேரூர் ராமசெட்டிபாளையத்தைச் சேர்ந்த அறிவொளி ராஜன் (60) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் திருமணம் ஆகாதவர் மற்றும் சென்டிரிங் பணியாளராவார். கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டு, யாரோ தன்னை கொல்ல வருகிறார்கள் எனக் கூறியிருந்ததாக அவரது சகோதரி கூறியுள்ளார். தற்கொலைக்கு முந்தைய நேரங்களில் அவர் காவல் நிலையத்துக்குள் வருவதை சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன. காவலரிடம் மனநிலை சரியில்லாதவராகத் தெரிந்ததால் வெளியே அனுப்பப்பட்டும், பின்னர் மறுபடியும் மேல்மாடிக்கு சென்றுள்ளார். அங்குள்ள அலுவலகத்தில் நாற்காலியை வைத்து வேட்டியால் தூக்குப் போட்டு தற்கொலை தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.