புனித பிரான்சிஸ் சவேரியார் மேனிலைப்பள்ளி ஆண்டு விழா ஃ
தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேனிலைப் பள்ளியின் 141 ஆவது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.;
தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேனிலைப் பள்ளியின் 141 ஆவது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்குச் சவேரியானா இல்ல அதிபர் சிங்கராயர் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் முனைவர் பிரான்சிஸ் சேவியர் மற்றும் தலைமையாசிரியர் அமல்ராஜ் சே.ச. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராக இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், புதுக்கோட்டை தாரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநருமான மருத்துவர் தனசேகரன் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர் பேசும் போது தன் பள்ளிப் பருவத்தை நினைவு கூர்ந்ததோடு கல்வியே வாழ்க்கையில் உயர்வு தரும் எனக் குறிப்பிட்டார். 11 ஆம் வகுப்புக்கான திறனறித் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவர் விஷ்ணுக்குச் சிறப்புப் பரிசு வழங்கியும், ஒவ்வொரு வகுப்பிலும் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கியும் பாராட்டப் பெற்றனர். தமிழ்நாடு அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் மேனிலைப் பள்ளியின் ஆசிரியரும் எழுத்தாளருமான நெய்தல் அண்டோ பள்ளி நிர்வாகத்தினரால் பாராட்டப் பெற்றார். அறிவை விரிவாக்கு என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு ஆண்டு விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் மாணவர்கள், மாணவரின் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்கள் என ஏறத்தாழ மூவாயிரம் பேர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியர் ஆனந்தராஜ் வரவேற்க, உதவித் தலைமையாசிரியர் இருதய வளனரசு நன்றி கூறினார். மாணவர்கள் வளன், ஆரோக்கிய கிராசியோ, நித்திஸ் ராஜ் ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர்.