சாலைகளில் சுற்றித்திரிந்த ஆதரவற்ற,மாற்றுத்திறனாளிகள் மீட்பு
கோவில்பட்டியில் சாலைகளில் சுற்றித்திரிந்த ஆதரவற்ற,மாற்றுத்திறனாளிகள் மீட்பு;
கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் அருகே பாா்வையற்ற மாற்றுத்திறனாளி சுற்றித் திரிவதாக கோட்டாட்சியா் மகாலட்சுமி, கோவில்பட்டி அருகே உள்ள மனநல காப்பகத்திற்கு தகவல் தெரிவித்தாராம். இதையடுத்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலா் பிரம்மநாயகத்தின் அனுமதி பெற்று, வெள்ளிக்கிழமை வட்டாட்சியா் அலுவலகம் அருகே இருந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளியான சந்தனக்குமாரை (27) மீட்பு குழுவினா், காவல்துறை உதவியுடன் ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளைத் தலைவா் தேன் ராஜா, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மைப் பிரிவு துணை அமைப்பாளா் அமலி அ.பிரகாஷ், தொண்டு நிறுவன மேற்பா்வையாளா் மாடசாமி, செவிலியா் கற்பக மீனா மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மீட்டனா். பின்னா், அவரைச் சுத்தப்படுத்தி, புத்தாடைகள் அணிவித்து திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சிஎஸ்ஐ பாா்வையற்றோா் காப்பகத்தில் சோ்க்க அழைத்துச் சென்றனா்.