போதைப் பொருள் இல்லாத தூத்துக்குடியை உருவாக்க வேண்டும் : அமைச்சர் கீதா ஜீவன்
முற்றிலுமாக போதைப் பொருள் இல்லாத தூத்துக்குடியை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் வலியுறுத்தினார்.;
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, நந்தனம், அரசு கலைக் கல்லூரியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் "போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு (Drug Free Tamil Nadu)” மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை தலைமையேற்று, விருதுகள் வழங்கியதை தொடர்ந்து, தூத்துக்குடி அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஆகியோர் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததாவது : தமிழ்நாடு துணை முதலமைச்சர், போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சிறப்பாக செயல்பட்ட காவல் துறை அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார்கள். இந்நிகழ்வின் வாயிலாக குறிப்பாக நமது மாவட்டத்தை சார்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்த தகவல் சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. போதைக்கு அடிமையாக இருக்கின்ற பொழுது குடும்பம் மற்றும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களாக மாறுகின்றனர். மேலும், அவர்களால் சரியாக உழைப்பதற்கும் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. வேலைக்கான வாய்ப்பும் கிடைப்பதில்லை. எனவே, சமூகத்தில் அவப் பெயரோடு புறக்கணிக்கப்பட்டவர்களாக உள்ளனர். தன்னிலை தெரியாத நிலைக்கு சென்று விடுகின்றனர். எதிர்காலத்தில் அவர்களின் வாழ்வு என்பது பூஜ்யமாக மாறக்கூடிய நிலை ஏற்படுகிறது. எனவே, போதைப் பொருட்கள் பழக்கத்திற்கு அடிமையாக இருக்ககூடாது. மேலும், போதைப் பொருட்களுக்கு அடிமையாக இருப்பவர்களின் நிலை குறித்து உங்கள் நண்பர்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினருக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சமூக விரோதிகள் எதிர்கால சந்ததியினர்களின் வாழ்க்கையை சீரழிக்கின்றனர். எனவே, சமூகத்தில் போதைப் பொருட்கள் எங்கு விற்றாலும் மாணவர்களாகிய நீங்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கோ அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கோ தகவல் தெரிவிக்கலாம். நமது இளைஞர் சமுதாயத்திற்கு போதைப் பொருள் கிடைக்ககூடாது என்பதில் உறுதியுடன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். போதை பழக்கத்திற்கு உங்களுடைய நண்பர்கள் யாராவது அடிமையாக இருந்தாலும், அவர்களுக்கு அறிவுரைகளை கூறி மீட்டெடுப்பது நமது கடமையாக கொண்டு நீங்கள் செயல்பட வேண்டும். முற்றிலுமாக போதைப்பொருட்கள் இல்லாத தூத்துக்குடியை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். அதை செயல்படுத்துவதற்கான பயணத்தை நோக்கி பயணிக்க வேண்டும். குறிப்பாக இந்த ஆண்டு நமது மாவட்டத்திற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அதற்கான திட்டங்களை வகுத்து வருகிறார்கள். நமது மாவட்டத்தின் அனைத்து இளைஞர்களுக்கும் இந்த தகவலை கொண்டு சேர்க்க செயல்படுவோம். அவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்போம். இளைஞர்களின் வாழ்வை மீட்டெடுப்போம் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்தார்கள்.