மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் எண்டோஸ்கோபி வசதி

மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காது,மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சைக்கு எண்டோஸ்கோபி வசதி அறிமுகம்.;

Update: 2025-08-13 06:32 GMT
திருவாரூர் மாவட்டம்,மன்னார்குடியில் செயல்படும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை செய்ய, எண்டோஸ்கோப்பி கருவி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவர் என்.விஜயகுமார் கூறியதாவது: காது,மூக்கு,தொண்டை தொடர்பான அறுவை சிகிச்சைகள் எண்டோஸ்கோபி மூலமாக செய்யப்படுகின்றன. இந்த கருவி இல்லாத காரணத்தால், இதுநாள் வரை, சம்பந்தப்பட்ட நோயாளிகளை பரிசோதனை செய்து, அறுவை சிகிச்சைக்காக திருவாரூர் அல்லது தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், ரூ.7 லட்சம் மதிப்பில் எண்டோஸ்கோபி வசதியை ஏற்படுத்தி தந்த தமிழக அரசுக்கும்,மாண்புமிகு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், இந்த எண்டோஸ்கோபி வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். இது குறித்து காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் நிவேதா, சந்தியா ஆகியோர் கூறியதாவது: எண்டோஸ்கோபி வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதன் மூலம், மூக்கின் உள்ளே இருக்கும் எலும்பு மற்றும் குருத்தெலும்பு வளைவுக்கான (Endoscopic Septoplasty) எண்டோஸ்கோபி சிகிச்சை, மூக்கடைப்பு மற்றும் சைனஸ் பிரச்சனைகளுக்கான (FESS )அறுவை சிகிச்சை, காதில் சீழ் வடிதல், மற்றும் தொற்று கிருமியால் காது கேளாமைக்கு எண்டோஸ்கோபி ( Endoscopic tympano mastoidectomy) , மற்றும் குரல்வளை மற்றும் குரல் நாண்களில் உள்ள கட்டிகளுக்கு செய்யப்படும் நுண் அறுவை சிகிச்சை (( Micro Laryngeal Surgery) போன்ற சிகிச்சைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தஞ்சை, திருச்சி போன்ற பெரு நகரங்களுக்கு செல்ல வேண்டி இருந்த சூழலில் அரசு மருத்துவமனையில் இலவசமாகவே இத்தகைய அறுவை சிகிச்சைகள் செய்யப்படுவதால், இதுதொடர்பான நோயாளிகளுக்கு நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றனர்.

Similar News