எம்.ஆர்.ஐ., ஸ்கேன் ரிப்போர்ட்' கிடைக்காமல் நோயாளிகள்...அவதி
எம்.ஆர்.ஐ., ஸ்கேன் ரிப்போர்ட்' கிடைக்காமல் நோயாளிகள்...அவதி!காஞ்சியில் பணியாற்றிய மருத்துவர் தாம்பரத்திற்கு மாற்றம்;
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ரயில்வே சாலையில் இயங்கி வருகிறது. இங்கு, காஞ்சிபுரம் நகரம் மட்டுமல்லாமல், சுற்றியுள்ள ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வருகின்றனர். தினமும் 3,000 பேர் புறநோயாளிகளாகவே இம்மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். 23 வகையான சிகிச்சை முறைகளுக்கு, 70 மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். உள் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற, 765 படுக்கைகள் உள்ளன. இவ்வாறு பல வசதிகள் இம்மருத்துவமனையில் இருந்தாலும், சில குறைபாடுகள் இருப்பதால், நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். உதாரணமாக, சிறுநீரகம் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு, இப்போது வரை நிரந்தர மருத்துவர் இல்லை. வாரத்திற்கு, இரண்டு நாட்களோ அல்லது மூன்று நாட்களோ, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரியில் இருந்து மருத்துவர்கள் இங்கு வந்து சிகிச்சை அளிக்கின்றனர். இந்நிலையில், கதிர்வீச்சு துறையில், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பிரிவுக்கான நிரந்தர மருத்துவராக இருந்த அனந்தராமன், செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தில் புதிதாக துவங்கப்பட்ட அரசு மருத்துவமனைக்கு தற்காலிக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கான எம்.ஆர்.ஐ., ஸ்கேன் கண்காணிக்க மருத்துவர் இல்லாமல், ஒரு மாதமாக நோயாளிகள் அவதிப்படுகின்றனர். மூளை, முதுகு உள்ளிட்ட நுட்பமான உடல் பகுதிகளில் உள்ள பிரச்னைகளை கண்காணிக்கும் இந்த எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்க, 2,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இலவசமாகவும் இந்த ஸ்கேன் எடுக்கப்படுகிறது. மாதந்தோறும், இங்கு 1,500 'சிடி ஸ்கேன்'களும், 200 எம்.ஆர்.ஐ., ஸ்கேன்களும் சராசரியாக எடுக்கப்படுகிறது. சிடி ஸ்கேன் சம்பந்தமாக ரிப்போர்ட் வழங்க மருத்துவர் உள்ள நிலையில், எம்.ஆர்.ஐ., ஸ்கேனுக்கான மருத்துவர் இல்லாமல், நோயாளிகள் அவதிப்படுகின்றனர். சில நோயாளிகளுக்கு, 10 நாட்களுக்கு முன், இங்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை, அவர்களுக்கு ஸ்கேன் ரிப்போர்ட் கிடைக்கவில்லை. இதனால், உடலில் என்ன பிரச்னை என்பதை தெரிந்து கொள்ள முடியாமலும், அதற்கேற்ற சிகிச்சை முறைகளை தொடர முடியாமலும், நோயாளிகள் சிரமப்படுகின்றனர். காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் ஹிலாரி ஜோஷிடா நளினி கூறுகையில், ''தாம்பரம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் அங்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு இங்கு தான் பணியிடம் உள்ளது. அந்த மருத்துவர் காஞ்சிபுரத்திற்கு மீண்டும் வந்துவிடுவார்,'' என்றார்.