குமரி மாவட்டம் திருவட்டாரில் அம்ருத் குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகிறது. தற்போது திருவட்டார் பஸ்ஸ்டாண்ட் பகுதியிலிருந்து காங்கரை பகுதிக்கு குடிநீர் குழாய் பதிக்க சாலையோரம் துண்டிக்கப்பட்டு குடிநீர்குழாய் பதிக்கும் வேலைகள் நடந்து வருகிறது. கடந்த ஒருமாத காலமாக நள்ளிரவில் வேலை துவங்கி அதிகாலையில் குறிப்பிட்ட தூரத்திற்கு சாலையோரம் குழிகள் தோண்டி மண்போட்டு மூடிச்செல்கிறார்கள், மண்போட்டு மூடும்போது சமமாக மூடிச்செல்வது இல்லை என்பதால் சாலையோரம் மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அடிக்கடி வாகனங்களில் செல்வோர் விபர்த்துக்குள்ளாகிறார்கள். சாலையோரம் தோண்டி போடப்பட்ட மண்குவியல், ஆங்காங்கே குவிந்து கிடக்கும் கற்கள் ஆகியவை கலந்து தற்போது பெய்த மழையின் காரணமாக ரோட்டோரம் சகதிகாடாக காணப்படுகிறது. இதனால் திருவட்டார் பகுதி ரோட்டோரம் மக்கள் நடந்து செல்ல சிரமப்படுவதுடன், போக்குவரத்தும் கடும் சிரமத்துடன் நடக்கிறது. எனவே அம்ருத் திட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.