அரசுப் பள்ளிக்கு பாராட்டு சான்றிதழும் கேடயமும் வழங்கிய ஆட்சியர்
ஓலைப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டதை முன்னிட்டு, இப்பள்ளிக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொ) ராமநாதன் அவரிடம் வழங்கி பாராட்டை தெரிவித்தார்.;
பெரம்பலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில் கல்லூரிக் களப்பயணச் செயல்பாடுகள் தொடர்பாக மாவட்ட அளவிலான குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில், கல்லூரிக் களப்பயணச் செயல்பாடுகள் தொடர்பாக மாவட்ட அளவிலான குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில் இன்று (02.09.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, பள்ளிக் கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்கள் உயர் கல்வி சார்ந்த வழிகாட்டல் பெறும் வகையில், அருகாமையிலுள்ள கல்லூரிகளுக்கு அவ்வபோது கல்லூரிக் களப்பயணச் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், 2025 – 26 ஆம் கல்வி ஆண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்கள் உயர் கல்வி சார்ந்த வழிகாட்டல் பெறும் வகையில் கல்லூரிக் களப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு அதற்காக மாவட்ட அளவிலான குழு உறுப்பினர்களுடனான திட்டமிடல் கூட்டம் நடத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் 1,510 மாணவர்கள் கல்லூரி களப் பயணத்தில் கலந்து கொள்ள உள்ளனர். கல்லூரி களப் பயணத்தில் கலந்து கொள்ளும் மாணவர்களை அருகாமையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி, அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு அழைத்து சென்று, மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்புகள் சார்ந்து வழிகாட்டுதல் வழங்க வேண்டும். கல்லூரி களப்பயணம் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 29.01.2025 அன்று வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட, ஓலைப்பாடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்புடன் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடும் பள்ளிகளை பாராட்டி கேடயம் வழங்க அறிவுறுத்தியதன் அடிப்படையில், ஓலைப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டதை முன்னிட்டு, இப்பள்ளிக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொ) திரு.ராமநாதன் அவரிடம் வழங்கி பாராட்டை தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) ம.செல்வக்குமார், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் முதல்வர் ராமராஜ், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலர் பெ.வெங்கடேசன்,மாவட்ட ஆட்சிரின் நேர்முக உதவியாளர் (கல்வித்துறை) குமார், உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி மாவட்ட கருத்தாளர்கள் சீரங்கன், வேலுசாமி, உயர்கல்வி வழிகாட்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. மு.மகாதேவன், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்கள், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.