சமூக நீதி அரசு விடுதியில் இடம் வேண்டி மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி அலைபேசியில் கோரிக்கை

ஆணையினை பெற்றுக்கொண்ட மாணவி செல்வி கிருத்திகா கூறுகையில், மாவட்டம் விட்டு மாவட்டம் வந்து படிக்கும் என்னைப் போன்ற ஏழை மாணவிகளுக்கு பாதுகாப்புடன் கல்லூரி கல்வி பயில்வதற்கு மிகப்பெரிய வாய்ப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.;

Update: 2025-09-02 17:29 GMT
பெரம்பலூர் மாவட்டம் சமூக நீதி அரசு விடுதியில் இடம் வேண்டி மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி அலைபேசியில் கோரிக்கை வைத்த கல்லூரி மாணவியின் கோரிக்கையினை ஏற்று சேர்க்கைக்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி 01.09.2025 அன்று மாணவி செல்வி கிருத்திகா என்பவர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலைபேசியில் தொடர்புகொண்டு, தான் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், பொன்பரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முதலாமாண்டு பி.பி.ஏ பாடப்பிரிவில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தாய்,தந்தை கூலி வேலை செய்து வரும் நிலையிலும் தன்னை படிக்க வைப்பதாகவும், கள்ளக்குறிச்சியில் இருந்து தினமும் பெரம்பலூருக்கு பேருந்தில் கல்லூரி சென்று வர சிரமமாக இருப்பதால் தனக்கு அரசு விடுதியில் தங்கி படிப்பதற்கு உதவிட வேண்டும் என அலைலைபேசியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மாணவி மற்றும் மாணவியின் தாயார் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை பரிசீலித்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரி மாணவிகளுக்கான சமூக நீதி விடுதியில் அந்த மாணவிளை சேர்க்க உத்தரவிட்டார். அதனடிப்படையில், இன்று (02.09.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அந்த மாணவிக்கு சமூகநீதி விடுதியில் சேர்வதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். ஆணையினை பெற்றுக்கொண்ட மாணவி செல்வி கிருத்திகா கூறுகையில், மாவட்டம் விட்டு மாவட்டம் வந்து படிக்கும் என்னைப் போன்ற ஏழை மாணவிகளுக்கு பாதுகாப்புடன் கல்லூரி கல்வி பயில்வதற்கு மிகப்பெரிய வாய்ப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். விடுதியில் இடம் கிடைக்காமல் என்ன செய்வது என்று தவித்த நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தால் உடனடியாக ஏதாவது உதவி செய்வார் என நண்பர்கள் தெரிவித்த உடனே கூகுள் மூலம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியருடைய அலைபேசி எண்ணை பெற்று நேற்றுதான் தொடர்பு கொண்டேன், மாவட்ட ஆட்சித்தலைவரே என்னிடம் பேசுவார் என நினைக்கவில்லை. பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் எனது கோரிக்கையை தெரிவித்தேன். எதற்கும் கவலைப்படாதே உனக்கு விடுதியில் இடம் கிடைக்கும் என ஆறுதல் தெரிவித்ததோடு, அடுத்த அரை மணி நேரத்திற்குள் மாவட்ட ஆட்சித்தலைவரே என்னை அலைபேசியில் அழைத்து இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நன்றாக படிக்க வேண்டும் என தெரிவித்தார். எனக்கு விடுதியில் இடம் கிடைக்கும் என கனவிலும் எதிர்பார்க்கவில்லை. உயர்கல்வி பயில வேண்டும் என்ற எனது கனவை நனவாக்கி தந்த தமிழக அரசிற்கும் ,மாவட்ட ஆட்சியருக்கும் மனமார நன்றி கூறுவதாக தெரிவித்தார்.

Similar News