வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் : கனிமொழி எம்பி அறிவுறுத்தல்!
திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி பகுதியில் வளர்ச்சிப் பணிகள் குறித்து அலுவலர்களுடன் கனிமொழி எம்பி ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.;
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி பகுதியில் இன்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மீன்வளம் - மீனவர் நலன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் அங்கன்வாடி மையக் கட்டிடம் மற்றும் மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டி ஆகியவற்றினை திறந்து வைத்து, நகராட்சி அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். மேலும், புன்னைக்காயல் ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.17.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டடிடத்தினையும், திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் காயாமொழி ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் ஒரு இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினையும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, திருச்செந்தூர் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் நகராட்சி பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து துறை சார்ந்த அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நடத்தினார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் அனைத்தும் விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுருத்தினார். இந்நிகழ்ச்சியில், மண்டல இயக்குநர் நகராட்சி நிர்வாகம் விஜயலட்சுமி, திருச்செந்தூர் நகர்மன்றத் தலைவர் சிவ ஆனந்தி, திருச்செந்தூர் நகராட்சி ஆணையாளர் ஈழவேந்தன், திருச்செந்தூர் நகர்மன்ற துணைத்தலைவர் ஏ.பி.ரமேஷ், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாரன், செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.