டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்;
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள செட்டிகுறிச்சியில் வீட்டுடன் பலசரக்கு கடை நடத்தி வருபவர் சண்முகையா. இவர் வீட்டையும் கடையையும் மறைத்து அதேப் பகுதியைச் சேர்ந்த மாற்று சமுகத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த அமரர் ஊர்தி தள்ளு வண்டியை நிறுத்தி உள்ளார். இதுகுறித்து சண்முகையா அவரிடம் இப்படி மயான வண்டியை கடை முன்பு நிறுத்தினால் வியாபாரம் எப்படி நடக்கும் என கேட்டு வண்டியை அப்புறப்படுத்த கூறியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மாரிமுத்து வாகனத்தை எடுக்க முடியாது என தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் மாரிமுத்துவுடன் இணைந்து கயத்தார் காவல் நிலையத்தில் சண்முகையா உட்பட அவரது உறவினர்கள் மூன்று பேர் மாரிமுத்துவின் சமுதாய பேரைச் சொல்லி அவதூராக பேசியதாக அவர் மீது புகார் வழங்கியதையடுத்து கயத்தாறு போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்வதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், பொய் புகார் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், வழக்கினை திரும்பப்பெறக் கோரியும் அப்பகுதி மக்கள் தலைமையில் கோவில்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் உடனடியாக வாகனத்தை அப்புறப்படுத்துவதாகவும் மேலும் உரிய விசாரணை மேற்கொண்டு பொய் வழக்காக இருந்தால் தள்ளுபடி செய்வதாகவும் தெரிவித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.