ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் தொடர்பான விவசாயிகளின் கோரிக்கை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் - ஆட்சியர் 

ஆட்சியர்;

Update: 2025-09-05 14:48 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை  ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில், கிழக்கு கடற்கரை தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் உலக தேங்காய் தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் இ.வீ.காந்தி தலைமை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார். தஞ்சாவூர் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஏ.வெங்கடராமன், ஓய்வு பெற்ற வேளாண் இணை இயக்குநர் உ.வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தோட்டக்கலைத்துறை சார்பில்,  காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் நடமாடும் தள்ளுவண்டி, கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட பழக்கன்றுகள் அடங்கிய தொகுப்பு ஆகியவற்றை பயனாளிகளுக்கு வழங்கி பேசியதாவது, விவசாயிகளுக்கு உதவும் வகையில் கிருஷி விக்யான் கேந்திரா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து ஒன்றிய அரசுக்கு ஏற்கனவே கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. மீண்டும் மாநில அரசு மூலம் அது குறித்து வலியுறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், தென்னையை தாக்கும் பல்வேறு பூச்சிகள், வண்டுகளை தடுக்கும் வகையில், ஆராய்ச்சி மையம் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர், வேளாண் துறை செயலருக்கு பரிந்துரை செய்யப்படும். சட்டமன்ற உறுப்பினர் கேட்டுக் கொண்ட தென்னை தொழிற்பேட்டை அமைக்க தேவையான இடம் குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்படும். பேராவூரணி தென்னைக்கு என தனி வணிக மதிப்பு உள்ளது. இதில், எண்ணெய் பிழிதிறன் அதிகம் உள்ளது. தேங்காயை ஏற்றுமதி செய்வது எப்படி என்ற பயிற்சி வழங்கப்பட உள்ளது. அதில் பேராவூரணி பகுதியைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகளை தேர்ந்தெடுத்து பயிற்சி அளிப்போம். பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதியில் மட்டும் 14,700 ஹெக்டேர் தென்னை விவசாயம் செய்யப்படுகிறது. இந்த தென்னையையும், தென்னை விவசாயிகளையும் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். அதே போல, ரேஷன் கடையில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்" என்றார்.  நிகழ்ச்சியில், ஆண்டிக்காடு எஸ்.முருகையன், நாடியம் ஜி.ரமேஷ், களத்தூர் எம்.கோபிநாத், குருவிக்கரம்பை எஸ்.நாகராஜன் ஆகியோருக்கு கிழக்கு கடற்கரை தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில், "தென்னை செல்வர்" என்ற விருது வழங்கப்பட்டது.  இதில், பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தென்னே விவசாயிகள் கலந்து கொண்டனர். நிறைவாக, சங்கத்தின் மண்டலத் தலைவர் பள்ளத்தூர் ஏ.குழந்தைராசு நன்றி கூறினார்.

Similar News