தஞ்சாவூர் அருகே பெண் தூக்கு மாட்டி தற்கொலை

தற்கொலை;

Update: 2025-09-06 08:25 GMT
தஞ்சை அருகே கணவனின் குடிப்பழக்கத்தால் மனமடைந்த இளம்பெண் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால் தஞ்சாவூர் கோட்டாட்சியர் தனி விசாரணை மேற்கொண்டுள்ளார். தஞ்சை மாவட்டம் ராயமுண்டாண்பட்டியை சேர்ந்தவர் ரங்கராஜ் (28) . இவருடைய மனைவி ஸ்ருதி (24). இவர்கள் இருவரும் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இத்தம்பதிக்கு நான்கு வயதில் ஒரு மகளும் , ஒரு வயதில் ஒரு மகனும் உள்ளார். ரங்கராஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருவிழாப்பட்டியில் வசித்து வந்தார். இந்நிலையில் ரங்கராஜ் அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வருவது வழக்கம் என கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரங்கராஜுக்கும் ஸ்ருதிக்கும் இது சம்பந்தமாக குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ஸ்ருதி நேற்று காலை திருவிழாபட்டியில் தாங்கள் வசித்து வந்த வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஸ்ருதி வெகு நேரமாக வீட்டிலிருந்து வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் உள்ளே பார்த்தபோது அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்த செங்கிப்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு ஸ்ருதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செங்கிபட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் திருமணமாகி ஐந்து ஆண்டுகளே ஆவதால் ஸ்ருதி தற்கொலை குறித்து தஞ்சாவூர் கோட்டாட்சியர் இலக்கியா தனிவிசாரணை மேற்கொண்டுள்ளார். கணவரின் குடிப்பழக்கத்தால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவிழாபட்டியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Similar News