பேராவூரணியில் பராமரிப்பின்றி கிடந்த முதியவர் ஆதரவற்றோர் இல்லத்திற்கு  அனுப்பி வைப்பு

நிகழ்வு;

Update: 2025-09-08 13:43 GMT
தஞ்சாவூர் மாவட்டம்,  பேராவூரணி புதிய பேருந்து நிலையம் அருகே நடக்கமுடியாத நிலையில் பராமரிப்பின்றி தவழ்ந்த நிலையில் கிடந்த முதியவரை சமூக ஆர்வலர்கள் ஆதரவற்றோர் இல்லத்திற்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைத்தனர்.  பேராவூரணி புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த சில மாதங்களாக சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடக்கமுடியாமல் தவழ்ந்த நிலையில் பராமரிப்பின்றி, குளித்து பல நாட்களாகி அழுக்கடைந்த உடைகளுடன் கிடந்தார் . அவரிடம் விசாரித்தபோது கோவை அவிநாசி பகுதியை சேர்ந்தவர் என்றும் தமது பெயர் முனியன் என்பதை தவிர வேறு எந்த விபரமும் அவருக்கு தெரியவில்லை. அவரது நிலை அறிந்து அந்த  பகுதியில் உள்ள சிலர் வாங்கி கொடுக்கும் உணவுகளை உண்டு வாழ்ந்து வந்தார். இது குறித்து சமூக ஆர்வலரான ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் எஸ்.ரவிச்சந்திரன் பேராவூரணி காவல் ஆய்வாளர் பி.ஜெகதீசன் கவனத்திற்கு கொண்டு சென்றார்.  இதையடுத்து, ஆய்வாளர்  தமது சொந்தப் பணத்திலிருந்து ரூ.6 ஆயிரம் வழங்கி, கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் மூலம் முதியவரை குளிக்க வைத்து, புதிய ஆடைகள் மற்றும் அவருக்கு தேவையான பொருட்களுடன், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள ஆதரவற்றோர் இல்லமான குரும்பூர் புதிய நமது இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  நிகழ்ச்சியில், கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்க செயலாளர் ஜி.பிரதீஸ், மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டியராஜன், லயன்ஸ் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News