கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவிலில் இந்த மாதத்துக்கான ஆவணி பெளர்ணமி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும் விஸ்வரூப தரிசனமும் நடந்தது. அதன்பிறகு அம்மனுக்கு தங்கக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 4 மணிக்கு மீண்டும் நடைதிறக்கப்பட்டு இரவு 7 மணிக்குள் சாயராட்சை தீபாராதனை ஸ்ரீபலிபூஜை நடந்தது. பின்னர் அம்மனை வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரச்செய்த நிகழ்ச்சி நடந்தது. அதன்பின்னர் அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் அமரச்செய்து தாலாட்டு நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடந்தது.