கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம் !
பழைய ஓய்வூதியம் உடனே அமல்படுத்தாவிட்டால் 2026ல் திமுக ஆட்சி அமைப்பது கேள்விக்குறி – ஜாக்டோ ஜியோ எச்சரிக்கை.;
பழைய ஓய்வூதியம், ஊதிய உயர்வு, பணி உயர்வு, நிரந்தரம், காலியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முறையீட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கு பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் மலர்விழி, முதல்வர் ஆட்சிக்கு வந்தபோது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வேன், காலி பணியிடங்களை நிரப்புவேன் என்று அறிவித்திருந்தும், நான்கரை ஆண்டுகளான பிறகும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். இந்த மாதம் 30ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், டெட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், "ஆசிரியர்களுக்கு தேர்வு கட்டாயம் என்றால், அதேபோல் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் தேர்வு எழுதி பதவி வகிக்க வேண்டும்" எனக் கேள்வி எழுப்பினார். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் 2026 அரசு கேள்விக்குறியாகும் என்றும் மலர்விழி எச்சரித்தார்.