சேதுபாவாசத்திரம் அருகே அடிப்படை பிரச்னைகளை தீர்த்து வைக்கக்கோரி சிபிஎம் காத்திருப்பு போராட்டம் 

போராட்டம்;

Update: 2025-09-09 15:26 GMT
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மரக்காவலசை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு, அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  கழுமங்குடா, காரங்குடா கடற்கரையில் படகு நிறுத்த கால்வாயை தூர்வார வேண்டும். சுனாமி குடியிருப்பு ஈசிஆர் சாலை வடிகால் வாய்க்கால்களின் ஆக்கிரமிப்பு அகற்றி, குடியிருப்பு பகுதிகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்க வேண்டும். மரக்காவலசை  கிராமத்தில் குடிமனைப் பட்டா வழங்கிய நபர்களுக்கு இடத்தை அளவீடு செய்து வழங்க வேண்டும். அரசு வீடு, மின்சார வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.  சேதுபாவாசத்திரம் ஊராட்சி மீனவர் காலனி தெருசாலை, கடற்கரை பகுதியில் பள்ளிவாசல் தெருசாலை, துறைமுக சாலை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தெருசாலை ஆகியவற்றை சீர் செய்ய வேண்டும். சிவன் கோவில் குளத்தை தூர்வாரி பராமரிக்க வேண்டும்.  சேதுபாவாசத்திரம் பேருந்து நிலையத்தை இசிஆர் சாலையோடு இணைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அருகில் உள்ள கழிப்பறையை சீர் செய்து தர வேண்டும். சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் கழிவு, குப்பைகளை அகற்ற ஆங்காங்கே பிளாஸ்டிக் தொட்டிகளை அமைக்க வேண்டும்.  மீனவர் தடைக்கால நிவாரண பணம் கிடைக்காதவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். மீனவர் கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினர்களை சேர்த்து குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும். மீனவர் நலவாரிய பயன்களை தகுதியுள்ள பயனாளிகளுக்கு உடன் வழங்க வேண்டும்.  கூட்டுறவு சங்க தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும். கழுமங்குடா மீனவர் காலனி பகுதியில் தினசரி குடிநீர் வழங்க வேண்டும். கடற்கரையில் மின்விளக்கு வசதியும், பெண்களுக்கு பொதுக்கழிப்பறை வசதியும் ஏற்படுத்த வேண்டும்.  மரக்காவலசை  4ஆவது வார்டு புதுத்தெரு தார்ச் சாலையை சீரமைக்க வேண்டும். வயல்வெளிகளுக்கு செல்ல புதிய சாலை அமைக்க வேண்டும். மழைநீர் வடிவதற்காக ஊராட்சி நிர்வாகம் வெட்டிய வாய்க்கால்களில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதை சரி செய்ய வேண்டும். ஏற்கனவே நடைபெற்ற போராட்டங்களின் போது வட்டாட்சியர் தலைமையில் நடத்தப்பட்ட அமைதி பேச்சு வார்த்தையில் முடிவெடுத்தபடி எந்த பணிகளும் நடைபெறவில்லை எனவும்  அரசுத் துறை அலுவலர்களின் மெத்தனப் போக்கை கண்டித்து,  சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா மரக்காவலசை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைகள் சார்பில், தொடர் காத்திருப்பு போராட்டம் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பி.பெரியண்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே. செந்தில்குமார், வழக்குரைஞர் வீ.கருப்பையா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  இதில், கிளைச்செயலாளர்கள்  ஆர்.கர்த்தர், எஸ்.நிஜாம்,  வி.நாகேந்திரன், பூவாணம் எழிலரசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்  ருக்கூன் மற்றும் 20 பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, அங்கு வந்த சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகரன், நாகேந்திரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மாவதி, சேதுபாவாசத்திரம், காவல் ஆய்வாளர் தண்டாயுதபாணி, உதவி ஆய்வாளர் மனோஜ் குமார், கிராம நிர்வாக அலுவலர் வல்லத்தரசு, ஊராட்சி செயலாளர் நடராஜன் ஆகியோர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.  ய இதில், அக்.25ஆம் தேதிக்குள் மனைப்பட்டா சம்பந்தமாக தீர்வு காணப்படும். மற்ற பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என அலுவலர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

Similar News