ஒரத்தநாட்டில் நூறு நாள் வேலை கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் 

ஆர்ப்பாட்டம்;

Update: 2025-09-10 16:14 GMT
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஒன்றியத்திற்குட்பட்ட பஞ்சநதிக்கோட்டை, காசாநாடு தெக்கூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நூறு நாள் வேலை தொடர்ந்து வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மாதத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், செவ்வாய்க்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர், எஸ்.கோவிந்தராஜ், மாதர் சங்கம் மலர்கொடி தலைமையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் தன்னெழுச்சியாக திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது, "தொடர்ச்சியாக நூறு நாள் வேலை வழங்க வேண்டும். கூலியை குறைக்காமல் வழங்க வேண்டும்" என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.  பின்னர் இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய்யிடம் கோரிக்கை மனு அளித்தனர்.  பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய் கூறியதாவது, "நூறு நாள் பணி அனைத்து பொது மக்களுக்கும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. வேலை நாட்கள் குறை வாக கொடுக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இது குறித்து உரிய விசாரணை செய்து அவர்களுக்கு நூறு நாள் வேலையை தொடர்ந்து வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

Similar News