தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் முருகன் கோயிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை

கொள்ளை;

Update: 2025-09-10 16:16 GMT
தஞ்சாவூர் அருகே, புன்னைநல்லூரில் பழமையான முருகன் கோயிலில் மூன்று ஐம்பொன் சிலைகளும், ஒரு வெங்கல கலசமும் கொள்ளை போனது. புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே 200 ஆண்டுகள் பழமையான பாலதண்டாயுதபாணி கோயில் உள்ளது. இந்த கோயிலி்ல் கத்தரிநத்தத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சதீஷ்குமார் (37) பூஜைகளை செய்து வருகிறார். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு 7.30 மணிக்கு கோயிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். பின்னர் செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணிக்கு கோயிலை திறக்க வந்துள்ளார். அப்போது கோயிலுக்குள் சென்று பார்த்தபோது அங்கு கிரில் கேட்டு வைத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஒன்றேகால் அடி உயர முருகன் சிலை, தலா ஒரு அடி உயரத்தில் வள்ளி- தெய்வானை சிலைகள், வெங்கல கலசம் என ரூ.3.50 லட்சம் மதிப்பிலான சிலைகள் கொள்ளை போனது தெரிய வந்தது.  கொள்ளையர்கள் வெல்டிங் மிஷின் மூலம் கிரில் கேட்டை உடைத்து சிலைகளை கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து சதீஷ்குமார் தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்துக்கு புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் கோயிலுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News