உணவு பதப்படுத்தும் தொழில் தொடங்க இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி - மாவட்ட ஆட்சித்தலைவர்
பயிற்சி;
தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (TNAPEx) மற்றும் தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி (நபார்டு) இணைந்து, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் (TNAU) மூலம் “உணவுத் தொழில் முனைவோர் விரைவுப்படுத்தும் திட்டத்தின் (Food Business Accelerator Programme), கீழ், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 இளைஞர்களுக்கு புதிய உணவு பதப்படுத்தும் தொழில் தொடங்க தேவையான திறன்களை பெறும் வகையில் மூன்று மாத தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விண்ணப்பிக்க தகுதியான பயனாளிகள்: இத்திட்டத்தில் பயன்பெற 18 முதல் 35 வயது நிரம்பியவராகவும், குறைந்தது பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் மற்றும் உணவுத் தொழில் தொடங்க ஆர்வம் உள்ள இளைஞர்களாக இருக்க வேண்டும். இப்பயிற்சியின் சிறப்பம்சங்கள் : • உணவுத் தொழில் தொடங்கும் நடைமுறைகள் • சந்தை நிலை, பிராண்டிங் & விளம்பரம் • நிதி மேலாண்மை • உரிமம் மற்றும் வளர்ச்சி வழிகாட்டுதல் • தொழில் நிறுவனங்களுக்கு நேரடி இணைப்பு • 3 மாதங்கள் தங்குமிட வசதிகளுடன் கூடிய இலவச பயிற்சி இப்பயிற்சியினை முழுமையாக நிறைவு செய்த புதிய உணவு பதப்படுத்தும் தொழில் தொடங்க விருப்பமுள்ள இளைஞர்களுக்கு நடைமுறையில் உள்ள அரசு சார்ந்த திட்டங்களின் மூலமாக வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். இப்பயிற்சிக்கான பயனாளிகளை தேர்ந்தெடுக்கும் முறை: இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் பயனாளர்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 12.09.2025 வெள்ளிக்கிழமை காலை 9.30 முற்பகல் முதல் மாலை 4.00 பிற்பகல் வரை நேர்காணல் முகாமில் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே, இத்திட்டத்தின் மூலம் பயனடைய விரும்புவர்கள் மாவட்ட தொழில் மையம் மூலமாகவும், TNAPEx மூலமாகவும் நேர்காணல் நடைபெறும் நாள் அன்று நேரடியாக சென்றும் பதிவு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தை பற்றிய மேலும் விவரங்களுக்கு: முனைவர் கோ. பாண்டித்துரை - மூத்த மேலாளர் TNAPEx - 8122598840 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.