தஞ்சாவூர், பழைய பேருந்து நிலையத்தில் 2 நுழைவு வாயில்கள் உள்ளன. இந்த நுழைவு வாயில்கள் அமைந்துள்ள பகுதியில் சாலை குறுகலாக இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், அந்தப் பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் மிகவும் சிரமமான சூழ்நிலை ஏற்பட்டது. அந்தப் பகுதியில் இருந்த கடைகளின் முன்பு தரைத்தளம் போடப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ஆக்கிரமித்து போடப்பட்டு இருந்த தரைத்தளத்தை அப்புறப்படுத்தி அந்த சாலையை அகலப்படுத்தி பொதுமக்கள் நடந்து செல்வதற்கு ஏதுவாக நடைபாதையும் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வியாழக்கிழமை மாநகராட்சி ஆணையர் கண்ணன் உத்தரவின் பேரில், மாநகராட்சி அலுவலர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பொக்லின் எந்திரம் மூலம் கடைகளின் முன்பு ஆக்கிரமித்து போடப்பட்டு இருந்த தரைதளத்தை இடித்து அப்புறப்படுத்தினர். மேலும் இந்த பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளையும் மாநகராட்சி அலுவலர்கள் அகற்றினர்.