சாலை சீரமைப்பு துவங்காததால் வாகன ஓட்டிகள் அவதி
சாலை சீரமைப்பு துவங்காததால் வாகன ஓட்டிகள் அவதி;
செங்கல்பட்டு மாவட்டம், கலிவந்தபட்டு - மறைமலை நகர் சாலை 4 கி.மீ., உடையது. இந்த சாலையை கலிவந்தபட்டு, கடம்பூர், கூடலுார் உள்ளிட்ட, 10-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடம்பூர், கலிவந்தபட்டு உள்ளிட்ட பகுதிகளில், இச்சாலை கடுமையாக சேதமடைந்து உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து, காயமடைந்து வருகின்றனர். சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்ததால், கடந்த 2023ல், நகராட்சி பொது நிதி 51.5 லட்சம் ரூபாயில், சாலையை சீரமைக்க, 'டெண்டர்' விடப்பட்டு, தனியார் நிறுவனம் எடுத்தது. ஆனால் இரண்டு ஆண்டுகள் கடந்தும், இதுவரை சாலை அமைக்கும் பணிகள் துவக்கப்படவில்லை.வாகன ஓட்டிகள் கூறியதாவது: இந்த சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் உள்ளதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. அவ்வப்போது, பள்ளங்களில் ஜல்லி கற்கள் மட்டும் கொட்டப்படுகின்றன. எனவே, இந்த சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.