வந்தேபாரத் ரயிலுக்கு திருச்செந்தூரில் இணைப்பு ரயில் : வணிகர் சங்கம் தீர்மானம்

வந்தேபாரத் ரயிலுக்கு திருச்செந்தூரில் இணைப்பு ரயில் : வணிகர் சங்கம் தீர்மானம்;

Update: 2025-09-22 09:01 GMT
நெல்லையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயிலுக்கு திருச்செந்தூரில் இணைப்பு ரயில் இயக்க வேண்டும் என நாசரேத் வணிகர் சங்க ஆண்டு விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம்,நாசரேத் நகர வணிகர் சங்க 25வது ஆண்டு விழா ஜேடி கிராண்ட் ஹாலில் நடந்தது. சங்க தலைவர் ஜெபஸ் திலகராஜ் தலைமை வகித்தார். தொழிலதிபர் ராமச்சந்திரன், துணைத்தலைவர் ஆறுமுகம், செயலாளர் செல்வன், துணை செயலாளர் செய்யது முகமது, பொருளாளர் அகிலன், முன்னாள் பேரூராட்சி தலைவர் மாமல்லன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ‌நிர்வாகக்குழு உறுப்பினர் கிருஷ்ணராஜ் வரவேற்றார். நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர், மோகன்சிங் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தீர்மானங்கள்: நாசரேத்தில் கூட்டுறவு நூற்பாலை செயல்பட்ட இடத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்க வேண்டும் எனவும், நாசரேத் பகுதியின் வியாபார வளர்ச்சிக்காக திருவைகுண்டம் தொகுதி பிடாநேரி கிராமத்தில் சுமார் 120 ஏக்கரில் சிட்கோ நிறுவனம் அமைக்கப்பட்டது. அதில் அநேக தொழிற்சாலைகளை உள்ளடக்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க அரசு முழு மூச்சில் அதில் கவனம் செலுத்தி நாசரேத், மெஞ்ஞானபுரம், சாத்தான்குளம், ஆழ்வார் திருநகரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி, நாசரேத் பகுதி வணிகர்களை காத்திட வேண்டும் எனவும், திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு நேரடி ரயில் இயக்க வேண்டும் எனவும், கோயம்புத்தூர், பெங்களூர், திருப்பதி போன்ற ஊர்களுக்கும் ரயில் சேவை செய்ய வேண்டும் எனவும், நெல்லையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயிலுக்கு திருச்செந்தூரில் இணைப்பு ரயில் இயக்க வேண்டும் எனவும், சாத்தான்குளத்தில் இயங்கி வரும் அரசு போக்குவரத்து டெப்போவை விரிவாக்கம் செய்து அங்கிருந்து நாசரேத் வழியாக கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை போன்ற பகுதிகளுக்கு புதிய பேருந்துகள் இயக்க வேண்டும் எனவும், மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொது மக்கள் பயன் பெறும் வகையில் 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வியாபாரிகள் திரளானோர் கலந்து கொண்டனர். நிர்வாகக்குழு உறுப்பினர் பாபு செல்வன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை நாசரேத் நகர வணிகர் சங்க செயலாளர் செல்வன் செய்திருந்தார்.

Similar News