பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்தினருடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்

ஹோட்டல் கடைக்கு முன்பு இருந்த படிக்கட்டை ரவுடிகளை வைத்து உடைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து தர்ணா போராட்டம்;

Update: 2025-09-22 16:14 GMT
பெரம்பலூரில் பால் வியாபாரி ஒருவர் முன்விரோதம் காரணமாக தனது உணவகம் முன்பு பாறாங்கற்களைக் கொட்டி இடையூறு செய்வதுடன் தனது உணவகத்தின் வாயில் படிக்கட்டுகளை ரவுடிகளை கொண்டு இடித்து தன்னை உணவகத்தின் உள்ளே செல்ல முடியாமல் தடுத்து ரவுடிகளை வைத்து கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றம் சாட்டி உணவக உரிமையாளர் ஒருவர் கலெக்டர் அலுவலகத்தில் தனது குடும்பத்தினருடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நான்கு ரோடு, சந்திப்பில் உள்ள சப்தகிரி நகரில் வசிப்பவர் அன்புச் செழியன் மனைவி நித்யா(40). இவர் பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் தனக்கு சொந்தமான இடத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பாலாஜி பவன் என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், நித்யாவின் பக்கத்து கட்டிடத்துக்காரரும், பால் வியாபாரியுமான அருமடல் கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் தனது கட்டிடத்தையொட்டி தென்புறம், மேற்கு நோக்கி நித்தியாவின் கட்டிடத்தையொட்டி செல்லும் நீர்வழித்தடத்தை நித்யா குடும்பத்தின் மீதுள்ள முன்விரோதம் காரணமாக தன்னிடம் பட்டா உள்ளது என கூறி அவரது குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஒருசில மாதங்களில் நான்கு ஐந்து முறை பத்திரம் எழுதி, பெயர் மாற்றம் செய்ததோடு, கடந்த 16ஆம் தேதி நள்ளிரவில் நித்யா நடத்தி வரும் உணவகம் முன்பு பாறாங்கற்களை கொட்டி உணவகத்தின் உள்ளே செல்ல முடியாதவாறு ஆக்கிரமித்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் மறுநாள் காலை ஹோட்டல் திறக்க வந்த போது பார்த்து, ஆக்கிரைமிப்பு செய்யப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சடைந்த நித்யா, தனது கட்டிடத்தின் முன் பகுதியில் பாறாங்கற்களைக் கொட்டி ஏன் இடையூறு ஏற்படுத்தி வருகிறீர்கள் என செல்வகுமாரிடம் கேட்ட நிலையில் அவர் பெரம்பலூரில் உள்ள பிரபல ரவுடிகளுடன் சேர்ந்து மிரட்டியதோடு, உன்னை குடும்பத்தோடு கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக தெரிகிறது. இதனால் பயந்து போன நித்யா சம்பவம் குறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததன் பேரில் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ்பசேராவை சந்தித்து, நித்யா அளித்த புகாரின் அடிப்படையில் கட்டிடத்தின் முன் பகுதியில் இருக்கிற பாறாங்கற்களை அகற்றும் படி செல்வகுமார் தரப்பிற்கு அறிவுறுத்தியோடு, சம்பந்தப்பட்ட இடத்தை வருவாய்த்துறை மூலம் உரிய அளவீடு செய்து சுமூக தீர்வு காணுங்கள் என கூறியதாக தெரிகிறது. அதன் பேரில் சம்பந்தப்பட்ட இடத்தில் கொட்டி இருந்த பாறாங்கற்களை கடந்த 19ஆம் தேதி செல்வகுமார் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் அகற்றி லாரியில் ஏற்றி அப்புறப்படுத்தியுள்ளனர். அப்போது நித்தியாவின் ஹோட்டலுக்குள் சென்று வர பயன்படுத்தி வந்த படிக்கட்டுகளையும் இடித்து அப்புறப்படுத்தி கட்டிடத்திற்குள் செல்ல முடியாமல் தடுத்துள்ளனர். ஹோட்டலுக்குள் சென்று வர பயன்படுத்தி வந்த படிக்கட்டுகள் இடித்த தகவலை போலீசாருக்கு தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், பெரும் மன உளைச்சலுக்குள்ளான நித்யா படிக்கட்டுகளை இடித்து பாதையை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தியபடி தனது கணவர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தரையில் அமர்ந்து, ரவுடிகளிடமிருந்தும், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்தும் பாதுகாப்பு வேண்டுமென வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நித்தியா உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை சமரசம் செய்து கலெக்டரிடம் புகார் மனு அளிக்க அறிவுறுத்தினர். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் மிருணாளினியிடம் நித்யா குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட வருவாய்த் துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அறிவுறுத்தினார். முன்விரோதம் காரணமாக பால் வியாபாரி ஒருவர் உணவாகம் முன்பு பாறாங்கற்களை கொட்டி பாதையை அடைத்ததோடு உணவகத்திற்கு செல்லும் படிக்கட்டுகளையும் ரவுடிகளைக் கொண்டு இடித்து அப்புறப்படுத்தி உணவாக உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரம்பலூர் நகரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Similar News