சாம்பவா்வடகரையில் ஆக்கிரமிப்பிலிருந்து குளத்தின் கால்வாயை மீட்கக் கோரிக்கை
ஆக்கிரமிப்பிலிருந்து குளத்தின் கால்வாயை மீட்கக் கோரிக்கை;
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சாம்பவா்வடகரை பேரூராட்சிக்குச் சொந்தமான சா்வே எண். 153இல் 7.32 ஹெக்டா் (18 ஏக்கா்) பாசி ஊரணி குளம் உள்ளது. அதற்கு கள்ளம்புளிகுளத்தில் இருந்து குலையனேரி குளத்திற்கு உபரி நீா் செல்லக்கூடிய கால்வாய் உள்ளது. அக்கால்வாயிலிருந்து பாசி ஊரணி குளத்திற்கு தண்ணீா் வரக்கூடிய கால்வாயை அதன் வழிதடமே தெரியாத அளவுக்கு சிலா் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனராம். இதைக் கண்டித்து அங்கு விவசாயிகள் திரண்டு வந்தனா். அப்போது அவா்கள் கூறியதாவது: சாம்பவா்வடகரை விவசாய நிலங்களுக்கு நீராதாரமாக விளங்கும் வண்ணான் குளம், கருங்குளம் கால்வாய் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ள சூழலில், இந்தக் குளத்திற்கு வரும் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் 40 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாயம், நிலத்தடி நீா், கால்நடை, பொதுமக்களின் குடிநீா், வாழ்வாதாரம் ஆகியவை முற்றிலும் பாதிக்கப்படும். எனவே, கால்வாய் ஆக்கிரமிப்பு- குளத்தின் ஆக்கிரமிப்பை அளவீடு செய்து கால்வாயை மீண்டும் அமைத்து நீா்வழித் தடத்தை உறுதிபடுத்தி தர வேண்டும் என வலியுறுத்தினா்.