முத்தாரம்மன் தசரா திருவிழா முன்னேற்பாடுகளை ஆட்சியர் ஆய்வு

குலசை முத்தாரம்மன் தசரா திருவிழா முன்னேற்பாடுகளை ஆட்சியர் ஆய்வு;

Update: 2025-09-25 09:28 GMT
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் நேரில் சென்று ஆய்வு செய்தார்.  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவில் குலசேகரப்பட்டினத்தில் அமையப் பெற்ற அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா 23.09.2025 முதல் 03.10.2025 அன்று நடைபெறவுள்ளது. இத்திருவிழாவிற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் வருகை புரிவதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு செய்து பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். குலசேகரப்பட்டினம், அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவிலுக்கு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், இன்று வருகை தந்து கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்கள், கழிவறைகள் மற்றும் குளியலறைகள், குடிநீர் வசதி, மருத்துவ மையங்கள், மின்சார வசதி, பாதுகாப்பு வசதிகள், பக்தர்களுக்கான வரிசை முறை, கடற்கரை பகுதியில் செய்யப்பட்டுள்ள வசதிகள், தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள், தற்காலிக பேருந்து நிறுத்தங்கள், வாகனங்கள் செல்லும் பாதைகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்ததாவது: அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோவிலின் தசரா திருவிழா செப்டம்பர் 23, 2025 முதல் தொடங்கி அக்டோபர் 03, 2025 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளது. இத்திருவிழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட துறைச்சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, கள ஆய்வு மேற்கொண்டோம். 10 நாட்கள் நடைபெறுகின்ற திருவிழாவில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து வசதிகள், வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள், தற்காலிக பேருந்து நிறுத்தம், வருகின்ற பக்தர்களுக்கான குடிநீர் வசதி, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட மற்ற வசதிகளையும் ஏற்பாடு செய்திருக்கிறோம். குறிப்பாக கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகமான வாகன நிறுத்துமிடங்களை ஏற்பாடு செய்திருக்கிறோம். 39 தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தி, தசரா திருவிழாவினை முன்னிட்டு வரக்கூடிய பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்ற வகையில் வசதிகளை ஏற்பாடு செய்திருக்கிறோம். 3 முக்கிய சாலைகளில் தற்காலிக பேருந்து நிறுத்தங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. மொத்தமாக 350க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அக்டோபர் 02, 2025 மற்றும் அக்டோபர் 03,2025 ஆகிய நாட்களில் பக்தர்கள் அதிகமாக வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அந்நாட்களில் அதிகமான இச்சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மேலும், திருக்கோவிலுக்கு வருகை தருகின்ற பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையில், குடிநீர் வசதிக்காக போதிய அளவிலான குடிநீர் தொட்டிகளும், அதற்கான பைப் லைன்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதியதாக கட்டப்பட்டுள்ள கழிப்பிட வசதிகளும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதனையும் ஆய்வு மேற்கொண்டோம். கழிப்பிட வசதிகளை சிறப்பாக பராமரிப்பதற்கு போதிய அளவிலான தூய்மைப்பணியாளர்கள் நியமனம் செய்து பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர, குலசேகரப்பட்டினம் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளைச் சார்ந்த பிறப்பணியாளர்கள் எல்லாம் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை சார்பாக 3 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு, மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நடமாடும் மருத்துவக்குழுக்கள் (MMUs) மற்றும் திருக்கோவிலில் உள்ள மருத்துவமனைகள் உட்பட அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய அளவிலான மருத்துகள் இருப்பு இருப்பதை மருத்துவ பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு, உறுதி செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  கடற்கரைகளில் குளிக்கின்ற பக்தர்களின் பாதுகாப்புக்காக நீச்சல் வீர்ர்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு காவல் துறையினரும் ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர். அவர்களுடன் இணைந்து, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை வீர்ர்களும் ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர். குலசேகரபட்டிணம், அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோவிலின் தசரா திருவிழாவினை முன்னிட்டு போதிய அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகளும், பக்தர்களுக்கான வசதிகளும் உறுதி செய்வதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காவல்துறை சார்பாக 4000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். தேவை ஏற்பட்டால் கூடுதலாக 1000 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். ஏற்கனவே உள்ள கண்காணிப்பு கேமராக்களை விட கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையில் உள்ள ட்ரோன் கேமராக்கள் மூலமாகவும் கண்காணிக்கப்படும். வருகின்ற பக்தர்களுக்கான கட்டுபாடுகள், என்ன செய்யவேண்டும் உள்ளிட்ட கட்டுபாடுகள் குறித்து ஆலோசனை செய்து, சில நெறிமுறைகளை தசரா குழுவினர்களுக்கு வழிவகுத்து செய்திகுறிப்பாக வெளியிட உள்ளோம். இத்திருவிழா அமைதியான முறையிலும், ஆன்மீக அடிப்படையிலும் முழுமையாகவும், சிறப்பாகவும் நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்திருக்கின்றோம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார். ஆய்வின்போது, உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.புவனேஷ் ராம், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் ரா.கௌதம், திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தர், அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் செயல் அலுவலர் மற்றும் அரசுத் துறைச்சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Similar News