விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வனவிலங்கு பிரச்சினை கோரிக்கை !
காட்டுயானை தொல்லைக்கு நிரந்தரத் தீர்வு கோரி விவசாயிகள் ஆவேசம்.;
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், விளைநிலங்களில் நுழையும் காட்டுயானைகளை ரப்பர் குண்டு மூலம் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். கலெக்டர் பவன்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர். வனவிலங்குகளால் உயிரிழப்பும் பயிர் சேதமும் அதிகரித்து வருவதாகவும், 25 ஆண்டுகளாக இதற்கான நிரந்தர தீர்வு இல்லையெனவும் அவர்கள் குற்றம் சாட்டினர். பெண் விவசாயி ஒருவர், “அரசு பல திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி நிதி ஒதுக்குகிறது. அதுபோல் வனவிலங்குகள் வெளியே வராமல் தடுக்க சில ஆயிரம் கோடி செலவிட வேண்டும்” என ஆவேசமாக கூறியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.