திருச்செங்கோடு வட்டாரத்தில் செயல்படும் நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்கா மூர்த்தி ஆய்வு

திருச்செங்கோடு பகுதியில்நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தில் நாமக்கல் ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி ஆய்வு வேளாண்மை துறையின் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் அரசு திட்டங்களின் மூலம் 2399 மண் மாதிரிகளும்  155 பாசன நீர் மாதிரிகளும் பெறப்பட்டு மண்வள அட்டைகளாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்;

Update: 2025-09-27 13:53 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாரம் நாராயணம்பாளையம் கிராமத்தில் வேளாண்மை துறையின் கீழ் இயங்கி வரும் நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  துர்காமூர்த்தி,  ஆய்வு மேற்கொண்டார். திருச்செங்கோடு வட்டாரம் நாராயணம் பாளையம் கிராமத்தில் வேளாண்மை துறையின் கீழ்  இயங்கி வரும் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்தின் மூலம் விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் மண் மற்றும் பாசன நீர் மாதிரிகள் பகுப்பாய்வு செய்து மண்வள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. நடமாடும் மண் பரிசோதனை நிலைய வாகனம் மூலம் கிராமங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு விவசாயிகளிடமிருந்து மண் மாதிரி மற்றும் நீர் மாதிரிகள் பெறப்பட்டு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயத்துக்கு அடிப்படையான நிலத்தின் வளத்தை நிர்வகிப்பதில் மண் பரிசோதனை மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.  மண் பரிசோதனை செய்வதால் மண்ணின் தன்மை, சுண்ணாம்பு நிலை, உப்பின் நிலை, அமில கார நிலை ஆகியவற்றையும், பேரூட்ட சத்துக்களான                               தழை, மணி, சாம்பல் சத்துக்களின் அளவையும் நுண்ணூட்ட சத்துக்களான இரும்பு, துத்தநாகம், மாங்கனீஷ், தாமிர, சத்துக்களின் அளவையும் அறிந்து கொள்ள முடியும். மேலும் களர், உவர், அமில நிலங்களை கண்டறிந்து சீரமைக்கவும் மண் பரிசோதனை அவசியமாகும். அதோடு விலை நிலங்களில் தொடர்ந்து ரசாயன உரங்களை அதிக அளவில் பயன்படுத்துவதால் மண்வளம் பாதிக்கப்படுகிறது.  எனவே விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் ஒவ்வொரு பயிர் சாகுபடி செய்வதற்கு முன்பும் மண் பரிசோதனை செய்து பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் உர மேலாண்மை செய்வது அவசியம். இதனால் சாகுபடி செலவு குறைவதுடன் மண்வளம் மேம்படும். விவசாயிகள் தங்களுடைய மண் மாதிரிகளை பரிசோதனைக்காக தரும்பொழுது தங்களது பெயர், ஆதார் எண், முகவரி, நிலத்தின் சர்வே எண், சாகுபடி செய்ய உள்ள பயிர்கள் ஆகிய விவரங்களை தெரிவிக்க வேண்டும். மண் மற்றும் நீர் மாதிரிகளுக்கு ஆய்வு கட்டணமாக ரூ.30 ஒவ்வொரு மாதிரிக்கும் விவசாயிகள் செலுத்த வேண்டும். 2025 26 ஆம் ஆண்டிற்கு இதுவரை 33 முகாம்கள் நடத்தப்பட்டு 956 மண் மாதிரிகளும் 168 நீர் மாதிரிகளும், மேலும் வட்டாரங்களில் இருந்து அரசு திட்டங்களின் மூலம் 2,399 மண் மாதிரிகளும் 155 பாசன நீர் மாதிரிகளும் பெறப்பட்டு ஆய்வு முடிவுகள் மண்வள அட்டைகளாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்  துர்காமூர்த்தி,  தெரிவித்து உள்ளார். தொடர்ந்து, குமாரபாளையம் நகராட்சியில் மீன்வளத் துறையின் சார்பில் மானியம் பெற்று செயல்படும் அலங்கார மீன்விற்பனை நிலையம், அதே பகுதியில் மகளிர் சுய உதவிக் குழுவினரின் சுய தொழில் செயல்பாடுகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநர்  சு.மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) க.இராமச்சந்திரன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Similar News